ஹெபடைடிஸ் வைரஸ் நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூலை 28ம் தேதி உலக ஹெபடைடிஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஹெபடைடிஸ் வைரஸ் ஐந்து முதன்மை வகைகளைக் கொண்டுள்ளது, அவை A, B, C, D மற்றும் E என அறியப்படுகின்றன. அவை அனைத்தும் கல்லீரல் நோயை ஏற்படுத்துகின்றன, ஆனால் தோற்றம், பரவுதல் மற்றும் தீவிரத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றுக்கிடையே முக்கிய வேறுபாடுகள் கண்டறியப்படுகின்றன.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உலகில் ஏறத்தாழ 354 மில்லியன் மக்கள் ஹெபடைடிஸ் பி மற்றும் சி உடன் வாழ்கின்றனர். பெரும்பாலான மக்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைப்பதற்கு அறியதாக உள்ளது.
உலக சுகாதார நிறுவனம் ஹெபடைடிஸ் இல்லாத உலகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தப் விழிப்புணர்வு தினத்தைத் தொடங்கியது. உலக ஹெபடைடிஸ் அமைப்பு 2007ம் ஆண்டு நிறுவப்பட்டது. அதை அடுத்து 2008ம் ஆண்டில் சமூகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட முதல் உலக ஹெபடைடிஸ் தினம் அனுசரிக்கப்பட்டது.
வைரல் ஹெபடைடிஸ் ஒரு பெரிய உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாக உள்ளது, 2019 ஆம் ஆண்டில் 296 மில்லியன் மக்கள் நாள்பட்ட ஹெபடைடிஸ் பி மற்றும் 58 மில்லியன் மக்கள் நாள்பட்ட ஹெபடைடிஸ் சி பாதிப்புக்கு ஆளானதாக தரவுகள் தெரிவிக்கின்றன. உலக ஹெபடைடிஸ் தினம் ஆண்டுதோறும் ஜூலை 28 அன்று டாக்டர் பாரூச் ப்ளம்பெர்க்கின் பிறந்தநாளில் அனுசரிக்கப்படுகிறது ( 1925-2011). டாக்டர். ப்ளம்பெர்க் 1967ல் ஹெபடைடிஸ் பி வைரஸைக் கண்டுபிடித்தார், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ஹெபடைடிஸ் பி தடுப்பூசியை உருவாக்கினார், மேலும் இந்த சாதனைகளுக்காக நோபல் பரிசு பெற்றார்.
உலக ஹெபடைடிஸ் தினத்திற்கான இந்த ஆண்டு கருப்பொருள், 'ஹெபடைடிஸ் சிகிச்சையை உங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருதல்.(Bringing hepatitis care closer to you)' இந்த கருப்பொருளின் அடிப்படையில் ஹெபடைடிஸ் சிகிச்சையை இன்னும் அணுகக்கூடியதாக மாற்றுவதன் அவசியத்தை இந்த ஆண்டுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது.