தோலின் வயதை 30 ஆண்டுகள் வரை பின்னோக்கிக் கொண்டு செல்லும் ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
நமக்கு வயதாகிவிட்டது என்பதை உணர்த்தும் முதல் சிக்னல் தோல் தான். ஆன்ட்டி ஏஜிங், ஆரோக்கிய உணவு, யோகா என என்னதான் செய்தாலும் வயது தெரியத்தான் செய்யும். இதற்குத் தீர்வு கண்டுள்ளனர் பிரிட்டனின் காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பாப்ரஹாம் மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தான் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
இந்த புதிய முறையின்படி, செல்கள் வயதாகும் தன்மையை மறக்கும்படி செய்யப்படுகிறது. இதனால் தோலின் வயதை 30 ஆண்டுகள் வரை பின்னோக்கி அழைத்துச் செல்ல முடியும் எனக் கூறுகின்றனர்.
2007ல் ஷின்யா யமனாகா என்ற விஞ்ஞானி தான் முதன்முதலில் வழக்கமான மனித செல்களை குறிப்பிட்ட சில பணிகளை மேற்கொள்ளும் ஸ்டெம் செல்லாக மாற்றினார். இந்த ஸ்டெம் செல் ரீப்ரோக்ராமிங் என்பது 50 நாட்களில் நடைபெறும். இந்த நடைமுறைக்கு யமனாகா முறை என்ற பெயர் உண்டு.
தோலின் வயதை பின்னோக்கி கொண்டு செல்லும் ஆராய்ச்சி பற்றி மூத்த ஆராய்ச்சியாளர் மருத்துவர் தில்ஜீத் கில் கூறும்போது நாங்கள் எங்கள் ஆராய்ச்சியில் செல்கள் அதன் தன்மையை இழக்காமல் புத்துயிர் பெறுவதைக் கண்டோம்.
மனித குலம் நீரிழிவு, இதய நோய், நரம்பியல் கோளாறுகள் என பல் நோய்களுகு ஆட்படுகிறது. இப்போது நாங்கள் கண்டுபிடித்துள்ள செல் புத்தாக்கம் பெறும் முறைமையை இம்மாதிரியான நோய்களுக்கான சிகிச்சையாக உருவாக்குவதே எங்களின் இலக்கு. 25 ஆண்டுகளுக்கு முன்பு குளோன் செய்யப்பட்ட டாலி என்ற செம்மறி ஆட்டை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட நுட்பங்களின் அடிப்படையில் இந்தத் தொழில்நுட்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆய்வுக் குழுவின் தலைவர், கேம்ப்ரிட்ஜில் உள்ள பாப்ரஹாம் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் வுல்ஃப் ரெய்க், எங்களின் ஆராய்ச்சி மக்கள் முதுமையடையும் போது அவர்களின் ஆரோக்கியத்தைப் பேண பயன்படும். எங்கள் ஆராய்ச்சிக்காக நாங்கள் 53 வயதான நபரின் தோல் உயிரணுக்களை எடுத்தோம். அதை ஐபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரசாயன மாறுதலுக்கு உட்படுத்தினோம். அப்போது உயிரணுக்கள் ஸ்டெம் செல்லாக மாறாமல் அது புத்துயிர் பெற்றது. அதாவது 53 வயது நபரின் தோல் உயிரணு, 23 வயது நபரின் தோல் போல் ஜொலித்தது. இந்த ஆய்வின் இலக்கு என்னவோ, மனிதர்களின் ஆயுட்காலத்தைவிட, ஆரோக்கியத்தை நீட்டிப்பதே. முதுமை தடுக்க முடியாதது. தவிர்க்க முடியாதது. ஆனால் அதை நோயின்றி அனுபவிக்க முடியும்," என்று அவர் கூறினார்.
இதற்கு அடுத்தகட்டம், தசை, கல்லீரல், ரத்த அணுக்கள் போன்ற மற்ற திசுக்களில் ஐபிஎஸ் தொழில்நுட்பம் செயல்படுமா என்பதைப் ஆராயவிருக்கிறோம் என்று கேம்ப்ரிட்ஜ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.