சமூக நாய்களின் இனப்பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் தற்போது வரை மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளில் 12,144 எண்ணிக்கையிலான சமூக நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கும் ARV தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
சமூக நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை பணிகள்
தமிழக அரசினால் அறிவிக்கப்பட்ட சமூக நாய்களின் இனப்பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் கால்நடை மருத்துவக்குழுக்கள் இணைந்து ஆதரவற்ற சமூக நாய்களுக்கு ARV தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளில் 12,144 எண்ணிக்கையிலான சமூக நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கும் ARV தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், காரைக்குடி மாநகராட்சி சார்பில் கருத்தடை மையம் துவங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.
உபகரணங்கள் பெறப்பட்டவுடன் முழுமையாக கருத்தடை மையங்கள் செயல்படும்
சிவகங்கை, திருப்பத்தூர் கால்நடை மருத்துவமனைகள் மற்றும் தேவகோட்டை கால்நடை மருந்தம் ஆகிய மூன்று இடங்களில் கருத்தடை மையங்கள் அமைக்கப்பட்டு உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் கருத்தடை அறுவை சிகிச்சை பணிகளுக்கான உபகரணங்கள் கொள்முதல் பணி நடைபெற்று வருகின்றன. உபகரணங்கள் பெறப்பட்டவுடன் முழுமையாக கருத்தடை மையங்கள் செயல்படும். மேலும் ஒவ்வொரு கருத்தடை மையங்களுக்கும் அறுவை சிகிச்சை பணிகள் மேற்கொள்ள ஏதுவாக தலா 5 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு நாமக்கல், ஒரத்தநாடு மற்றும் திருநெல்வேலி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன்படி, தெருக்களில் சுற்றித்திரியும் மற்றும் ஆதரவற்ற தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பணி தனியார் பங்களிப்புடன் விலங்குகள் நலவாரியம் மூலம் விரிவுபடுத்துதல் திட்டம் அறிவிக்கப்பட்டு முடிகண்டம் கிராமத்தில் 50 செண்ட் நிலத்தில் கால்நடை கிளை நிலையத்துடன் கூடிய கருத்தடை மைய கட்டிடம் கட்டப்படவுள்ளது. நோய் வாய்ப்பட்ட மற்றும் தனித்து செயல்பட இயலாத விலங்குகளை பாதுகாத்திட தேவகோட்டை பகுதியில் விலங்குகள் காப்பகம் அமைத்திட உரிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அணுகி ரேபீஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்
இத்திட்டத்தில் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் தன்னார்வ அமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அடையாளம் கண்டு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி மற்றும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் குழு அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும், வளர்ப்பு நாய்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தினை அணுகி ரேபீஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.