கொரோனா என்ற ஒற்றைவார்த்தை ஒலிக்கத் தொடங்கி ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்டது. லாக்டவுன், மாஸ்க், சானிடைசர் என ஒரு வருடத்தில் சில கஷ்டங்களை சந்தித்தாலும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடலாம் என்ற எண்ணத்தையெல்லாம் இரண்டாம் அலை தவிடுபொடியாக்கியது. முதல் அலையைவிட இரண்டாம் அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை, அதிக உயிரிழப்புகள் என இந்தியாவே தள்ளாடியது. ஆனாலும் துரித நடவடிக்கைகளால் மாநிலங்கள் மீண்டன. ஆனால் இன்னும் செய்வதறியாது விழிக்கிறது கேரள மாநிலம்.  நேற்று மட்டும் இந்தியாவில் 42,500 பேருக்கு கொரோனா பாசிட்டிவ். இதில் கேரளாவில் மட்டுமே 29682 பேருக்கு பாசிட்டிவ். அதாவது இந்தியாவின் கொரோனா பாதிப்பில் 70% கேரளாவில் மட்டுமே பதிவாகியுள்ளது. எல்லா மாநிலங்களும் கொரோனா பாதிப்பில் உச்சத்தில் சென்று கீழ் இறங்கிவந்த நிலையில் கேரளா மட்டும் உச்சத்திலேயே இருக்கிறது. இப்படியான ஒரு சிக்கலில் கேரளா  மாநிலத்தை மேலும் அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது நிபா.  12 வயது சிறுவனை பலிகொண்டு ஒரு வித அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது நிபா.




சமீபத்திய வைரல் பாடல் வரியான ’’நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு’’ என்ற வார்த்தைகள் தற்போது கேரளாவுக்குத் தான் சரியாக பொருந்திப்போகிறது. கொரோனா போல அதிவேகமாக நிபா பரவாது என்றாலும் அது ஏற்படுத்தும் உயிரிழப்பு சதவீதம் அதிகம்.


நிபா என்றால் என்ன? 


பன்றிகளால் உருவானது எனக் கூறப்பட்டாலும் வௌவால்களாலும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. வௌவால்கள் சாப்பிட்ட பழங்களின் மூலமாகவும் இந்த நிபா வைரஸ் பாதிப்பு அதிகளவில் பரவ வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் கடந்த 2001-ஆம் ஆண்டு மற்றும் 2007-ஆம் ஆண்டு நிபா வைரசின் தாக்கம் காணப்பட்டது. அதிக மரங்கள், பழங்கள் என கடவுளின் தேசமாக உள்ள கேரளாவில் வெளவால்களுக்கு பஞ்சமில்லை என்பதே நிபா கேரளாவை தொடர்ந்து அச்சுறுத்த காரணமாக உள்ளது.


நிபா - கொரொனா - கேரளா!


கொரோனாவை போல சரசரவென நிபா பரவாது. ஆனால் நிபா வைரஸின் உயிரிழப்பு சதவீதம் அதிகம். முதன் முதலாக சிலிகுரி பகுதியில் 66 நபர்களுக்கு நிபா பாதிக்கப்பட்டது. அதில் 45 பேர் பலியாகினர். நிபாவின் உயிரிழப்பு சதவீதம் 68%. 2007ல் மேற்கு வங்கத்தில் 5 பேர் பாதிக்கப்பட்டனர். அனைவருமே உயிரிழந்தனர். சமீபத்தில் 2018ம் ஆண்டு கேரளாவில் நிபா அச்சுறுத்தியது. மொத்தமாக 18 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 17 பேர் உயிரிழந்தனர். 2019ல் எர்ணாகுளத்தில் ஒருவர் பாதிப்பட்டார். அவர் சிகிச்சையில் குணமடைந்தார். கொரோனா போல நிபா வேகமாது பரவாது என்பது ஆறுதல் என்றாலும், பாதிப்படைந்தால் உயிரிழப்புக்கே அதிக வாய்ப்பு என்பது கவலையளிக்கும் விஷயம். தற்போது, கேரளாவில் அதிக பாதிப்புகளை இதுவரை பதிவு செய்யவில்லை என்றாலும், சிறுவனின் உயிரிழப்போடு வரவை பதிவு செய்துள்ள நிபா அம்மாநிலத்தை சற்று பதறச்செய்ய வைத்துள்ளது. வேகமாக பரவும் கொரோனா ஒரு பக்கம், அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நிபா ஒரு பக்கம் என தற்போது தவித்து நிற்கிறது கேரளா.




என்ன செய்ய வேண்டும் தமிழ்நாடு?


பரவும் தொற்றுகளில் சிக்கித்தவிக்கும் கேரளா, தமிழ்நாட்டின் அண்டை மாநிலம் தான். குறிப்பாக கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதி எல்லாம் கேரளா - தமிழ்நாடு என்ற பிணைப்பாகவே இருக்கும். இந்த நேரத்தில் கேரள - தமிழக எல்லையில் முறையான சோதனைகள் செய்யப்படுவதும், கவனக்குறைவற்ற நடவடிக்கைகளுமே தமிழகத்தையும் தொற்றுகளில் தொல்லையில் இருந்து காக்க முடியும் என்பதே பலரில் கருத்தாக இருக்கிறது. ஏனென்றால் நிபா வேகமாக பரவாத நோய்தான் என்றாலும் பரவாத நோய் அல்ல. 


இது கடவுளின் தேசம்!


நிபா, சிகா, எபோலா போன்ற வைரஸ்களின் வரவு கடவுளின் தேசமான கேரளாவுக்கு புதிதல்ல. இப்போதைய நிலவரப்படி நிபாவால் சிறுவன் உயிரிழந்த பகுதி சுகாதரத்துறையில் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அப்பகுதி முழுவதும் கண்காணிக்கப்படுகிறது. நிபா குறித்த ஆய்வுக்கு மத்திய அரசின் குழுவும் கேரளா விரைந்துள்ளது.  கேரளாவுக்கு கொரோனா தான் புதிய அனுபவம். நிபாவை பொருத்தவரை பலமுறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது கேரளா. தற்போதும் துரித நடவடிக்கைகளை தொடங்கியுள்ள கேரளா விரைவில் நிபாவை காணாமல் ஆக்கும் என்பதில் ஐயமில்லை. அதேவேளையில் தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கும் கொரோனாவை விரைவில் கட்டுக்குள் கொண்டுவருவதே கேரளாவுக்கு நல்லதும் கூட.


எத்தனையோ பேரிடர்களை கடந்து வந்த  கடவுளின் தேசம், இந்த தொற்றுகளின் தொல்லைகளையும் எதிர்த்து கடந்து வர வேண்டுமென்பதே  அனைவரின் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும்.