சர்வதேச மனநல நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 10 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்த தினத்திற்கான கருத்தாக்கம் "Mental Health in an Unequal World' சமமற்ற உலகில் மனநலத்தைப் பேணுதல் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மனநலம் பற்றிய விழிப்புணர்வு உலகளவில் இன்னும் குறைவாகவே இருக்கிறது. அதுவும் குறிப்பாக நம் நாட்டில் மனநோய் சார்ந்த விழிப்புணர்வு கடைநிலையில் இருக்கிறது. பல்வேறு நோய்களுக்கும் தேடித் தேடி அவரவர் தகுதிக்கு ஏற்ப சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளும் மக்கள் மனநல பாதிப்பை மட்டும் வெளியில் சொல்லவே தயங்கும் சூழல் தான் உள்ளது.
காரணம் வேறு எந்த ஒரு நோயாளியும் சமூக புறக்கணிப்புக்கு உள்ளாகாத அளவிற்கு மனநோயாளிகள் சமூக புறக்கணிப்புக்கு உள்ளாவார்கள். குடும்பம், கல்வி நிலையம், பணியிடம் என எல்லா இடங்களிலுமே இவர்களுக்குப் பெரியளவில் சங்கடங்கள் மட்டுமே மிஞ்சுகிறது.


மும்பையைச் சேர்ந்த எம்பவர் (MPower) என்ற மனநல மையத்தின் உளவியல் ஆலோசகர் நிகிதா குப்தா கூறுகையில்,  "பெரும்பாலான கார்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் உடல்நிலையை உறுதி செய்ய அவ்வப்போது மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்தல், மருத்துவ காப்பீடு வழங்குதல், மருத்துவ விடுப்புகளை ஏற்பாடு செய்தல் போன்ற சேவைகளைத் தருகிறது. ஆனால் மனநல பாதிப்புகளுக்கு எவ்வித சலுகையும் இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழியர்களின் உடல்நலனில் அக்கறை செலுத்துவதுபோல் அவர்களின் மனநலனிலும் அக்கறை செலுத்த வேண்டும். மனநல பாதுகாப்புச் சட்டம் 2017ன் படி மனநல பாதிப்பு உள்ளோருக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டியது வலியுறுத்தப்பட்டுள்ளது.






2020ல், ஒயிட் ஸ்வான் ஃபவுண்டேஷன் மென்டல் ஹெல்த் சாம்பியன்ஸ் அட் ஒர்க்ப்ளேஸ் என்றொரு திட்டத்தை உருவாக்கியது. அதன்படி ஒரு நிறுவனத்தில் இரு சில ஊழியர்களுக்கு மனநலம் தொடர்பான அடிப்படை புரிதல் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் மனநல பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளும் அளவிலானவர்களாக தயார்படுத்தப்பட வேண்டும். அவர்கள் நிறுவனத்திற்கும் மனநல பிரச்சனை உடையவர்களுக்கும் இடையே ஒரு பாலம் செயல்பட்டு நிறுவனத்திடமிருந்து அவர்களுக்கு வேண்டிய சலுகைகளை பெற்றுத் தரக் கூடியவர்களாக இருக்க வேண்டும். சில நேரங்களில் மனநல பிரச்சனை இருக்கிறதா என்று உணராதவர்கள் கூட இங்கே வந்து தங்களின் மனம் திறந்து பிரச்சனைகளை சொல்லலாம் எனக் கூறப்படுகிறது.


மனநல பாதிப்புகள் குறித்து அவ்வப்போது ஊழியர்கள் மத்தியில் சிறுசிறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.


மருத்துவர்கள் சொல்வது என்ன?
மனநல ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்களும் மனநல பாதிப்பில் இருந்து மீள ஒரு நபர் பணிபுரிவது பெரும் உதவியாக இருக்கும். மனநல சிகிச்சையை முறையாக எடுத்துக் கொள்பவர்கள் அவர்களின் தகுதி, உடல்நிலைக்கு ஏற்ப பணி புரிய இயலும். ஆனால் பணியிடங்களில் அவர்களுக்கு முறையான சரியான சூழல் அமைய வேண்டும். அதை நிறுவனத் தலைமைகள் உறுதி செய்ய வேண்டும்" என்று வலியுறுத்துகின்றனர்.