போலியோ சொட்டு மருந்து முகாம்” வருகின்ற 28.06.2026 அன்று நடைபெறுகிறது.

Continues below advertisement

போலியோ

இளம்பிள்ளை வாதநோயை (போலியோ) இந்தியாவில் இருந்து முற்றிலுமாக ஒழிப்பதற்காக கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த 20 வருடங்களாக தமிழ்நாட்டில் போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும் குழந்தைகளை போலியோ வைரஸின பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் இந்த ஆண்டு வருகின்ற 28.06.2026 ஆம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் நோய் தடுப்புத் துறை வழிகாட்டுதலின் படி மதுரை மாநகராட்சியில் பிறந்தது முதல் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 1,15,168 குழந்தைகளுக்கு 437 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

Continues below advertisement

28 இடங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது.

மதுரை மாநகராட்சியின் அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் போன்ற இடங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான முக்கிய பேருந்து நிலையங்கள், இரயில் நிலையம், சோதனை சாவடிகள், வழிபாட்டுத்தலங்கள் ஆகிய 28 இடங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. மதுரை மாநகர் பகுதியில் 437 முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.    

சொட்டு மருந்து

இம்முகாம்களில் 0 முதல் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தை களுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இம்முகாம்களில் குறிப்பாக குடிபெயர்ந்து வந்துள்ள குழந்தைகள் இலங்கை அகதிகள், மறுவாழ்வு முகாம் போன்ற பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சொட்டு மருந்து வழங்கப்படும். தேசிய தடுப்பூசி அட்டவணையின்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் சொட்டு மருந்து வழங்கப்படும் அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இடது சுண்டு விரலில் அடையாளத்திற்காக மை வைக்கப்படும். 

1990 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சில தனியார் மருத்துவமனைகளிலும் இச்சொட்டு மருந்து வழங்கப்படும். போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகளை கண்காணிக்க மதுரை மாநகராட்சியின் பொது சுகாதாரப்பிரிவு பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சார்ந்த தன்னார்வலர்கள் என 1990 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.எனவே பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை வழங்கி பயன்பெறுமாறு மதுரை மாநகராட்சியில் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.