Targeted therapy சிகிச்சை முறையில் ஆரோக்கியமான திசுக்கள் பாதுகாக்கப்பட்டு புற்றுநோய் செல்கள் மட்டுமே குறிப்பாக அழிக்கப்படுகின்றன. குறைவான பக்கவிளைவுகள் இதன் சாதகமான அம்சங்களாகும்.
உலக புற்றுநோய் தினம்
இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு, ஆரோக்கியமான செல்களைப் பாதிக்காமல் புற்றுநோய் செல்களை மட்டும் அழிக்கும் 'இலக்கு சிகிச்சை' (targeted therapy) புதிய நம்பிக்கையை அளிப்பதாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலக புற்றுநோய் தினத்தை (பிப்ரவரி 4) முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மருத்துவர்கள் கூறியதாவது:
Targeted therapy சிகிச்சை முறையின் சிறப்பம்சங்கள்:
• துல்லியம்: சாதாரண கீமோதெரபி சிகிச்சையில் நல்ல செல்களும் பாதிக்கப்படும். ஆனால், இந்த நவீன சிகிச்சையில் புற்றுநோய் செல்கள் மட்டுமே குறிவைத்து அழிக்கப்படுகின்றன.
• குறைவான பக்கவிளைவுகள்: உடலின் மற்ற உறுப்புகளுக்கு பாதிப்பு குறைவு என்பதால், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் இச்சிகிச்சையை எளிதாகத் தாங்கிக்கொள்ள முடியும்.
• உயிர்காக்கும் விகிதம்: சிகிச்சைக்குப் பின் நோயாளிகளின் உயிர்வாழும் காலமும், வாழ்க்கைத் தரமும் கணிசமாக உயர்ந்துள்ளது.
டார்கெட்டட் தெரபி
இரத்தப் புற்றுநோயியல் துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர் T. காசி விஸ்வநாதன் கூறுகையில்: "முன்பெல்லாம் தீவிர இரத்தப் புற்றுநோய்க்கு அளிக்கப்படும் கீமோதெரபியை முதியவர்கள் தாங்குவது கடினமாக இருந்தது. இப்போது வந்துள்ள நவீன 'டார்கெட்டட் தெரபி' மூலம், எங்கள் மையத்தில் சிகிச்சை பெற்ற 7 பெரியவர்களில் 5 பேர் தற்போது முழு ஆரோக்கியத்துடன் உள்ளனர். குழந்தைகளுக்கு அளிக்கப்படும் நவீன சிகிச்சைகள் மூலம், 5-ல் 4 குழந்தைகள் புற்றுநோயிலிருந்து மீண்டு வருகின்றனர். முதியவர்கள் மட்டுமன்றி சிறுவயது குழந்தைகளுக்கும் இத்தகைய நவீன சிகிச்சைகள் அதிகம் பயனளிப்பதாக இருப்பதை இத்தரவுகள் உறுதிப்படுத்துகின்றன” என்றார்.
புதிய நம்பிக்கை
குழந்தைகளுக்கான இரத்தப்புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் R .M அன்னபூரணி கூறியதாவது: "இனோடுசுமாப் (Inotuzumab ) போன்ற மருந்துகள் புற்றுநோய் செல்களில் உள்ள புரதத்தை அடையாளம் கண்டு, அந்த செல்களை மட்டும் நேரடியாகத் தாக்குகின்றன. இது குணப்படுத்தவே முடியாது எனக் கருதப்பட்ட நிலையிலும் குழந்தைகளுக்குப் புதிய நம்பிக்கையைத் தருகிறது." எனவும் தெரிவித்தனர்.
80% குழந்தைகள் குணம்
குழந்தைகளுக்கான இரத்தப்புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் V. அனிதா கூறியதாவது: "இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எங்கள் மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எங்களது சிகிச்சையால் 80% குழந்தைகள் குணமடைந்து வருவது ஒரு மிகப்பெரிய சாதனையாகும்."
எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை
குழந்தைகளுக்கான இரத்தப்புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் V. S. வெங்கடேஸ்வரன் பேசுகையில், "தென் தமிழகத்திலேயே முதன்முதலாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை (BMT) மையத்தை எமது மருத்துவமனை தொடங்கியது. இதுவரை 400-க்கும் மேற்பட்டோருக்கு இந்த சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார். மருத்துவ நிர்வாகி டாக்டர்.B. கண்ணன் அவர்களும் இந்த நிகழ்வில் உடனிருந்தார்.