சமையலில் நாம் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சூழல் வருவதால் என்னென்ன பிரச்னைகள் உண்டாகும் என்பதைக் காணலாம். 

Continues below advertisement

ஊட்டச்சத்து நிபுணர் ராஷி சௌத்ரி என்பவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் இதனைப் பற்றி விவரித்துள்ளார். அதாவது சமையலறையில் எண்ணெய் தவிர்க்க முடியாத ஒன்றாகும். கடலை எண்ணெய், நல்லெண்ணெய், ரீஃபைண்ட் ஆயில், பாமாயில், கடுகு எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், தேங்காய் எண்ணெய் என ஒவ்வொரு சமையலறையும் ஒவ்வொரு கதை சொல்லும் இடமாக இருக்கும். 

சமையலறையில் இருந்து தான் ஒரு குடும்பத்தின் ஆரோக்கியம் தொடங்கும் என சொல்வார்கள். இத்தகைய இடத்தில் நாம் பயன்படுத்தும் எண்ணெய் உடலுக்கே கேடு விளைவிக்கும் என்றால் நம்ப முடிகிறதா?.. பல இந்திய வீடுகளில் பொரித்த பிறகு மீதமுள்ள எண்ணெயை வடிகட்டி சேமித்து வைத்து  மறுநாள் மீண்டும் பயன்படுத்தும் வழக்கம் இன்று உள்ளது. இது ஒவ்வொரு தலைமுறையிலும் இருந்தாலும் ஆரோக்கியமானது கிடையாது. இந்த விஷயத்தில் சில வழக்கங்களை நாம் மாற்ற வேண்டும். 

Continues below advertisement

என்னென்ன மாற்றம் செய்யலாம்?

அதன்படி, நீங்கள்  ஏதேனும் ஒன்றைச் சமைக்கிறீர்கள் என்றால் பழைய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதற்குப் பதிலாகப் புதிய எண்ணெயை பயன்படுத்தலாம். எண்ணெய் சூடாகும்போது தன் தன்மை மாறிம். இது ஆக்ஸிஜனேற்றம்  சிதைவை விரைவுபடுத்தும். எனவே மீண்டும் மீண்டும் சூடாக்குவதைத் தவிர்ப்பது நல்லது.

மீதமுள்ள எண்ணெயைச் சேமித்து வைப்பது நம்முடைய பழக்கங்களில் ஒன்றாக தோன்றினாலும் அதே எண்ணெயை  மீண்டும் மீண்டும் நீண்ட நாட்கள் வைத்திருந்து பயன்படுத்துவதும் மிக தவறானது. அந்த எண்ணெயை சிலர் பாத்திரங்கள் கழுவும் சிங்கில் கொட்டி விடுவார்கள். இது முற்றிலும் தவறான பழக்கமாகும். காரணம் எண்ணெய்க்கு ஒட்டும் பழக்கம் உள்ளது. அதனால் எண்ணெய் கழிவுநீர் செல்லும் குழாயில் ஒட்டிக்கொண்டு அடைப்பை உண்டாக்கும். எனவே வழிகாட்டுதல்களின்படி சூடான எண்ணெய் ஆறிய பிறகு அதனை அப்புறப்படுத்துங்கள். குறைவாக இருந்தால் பேப்பர் வைத்து அதனை உறிஞ்சியும், அதிகமாக இருந்தால் ஒரு பாட்டில் அல்லது பேப்பரில் ஊற்றியும் அப்புறப்படுத்தலாம். 

உண்டாகும் பாதிப்புகள் என்னென்ன?

பொரித்த எண்ணெயை பல முறை பயன்படுத்துவது தவிர்க்கப்படாவிட்டால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். மேலும் உடலில் அழற்சி உண்டாகலாம். ரத்த நாளங்கள் மற்றும் கொழுப்பு அளவில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னை உண்டாகலாம். பயன்படுத்திய எண்ணெயை அதிகபட்சம் ஒரு முறை மட்டுமே குறைந்த வெப்பத்தில் பயன்படுத்துவது நல்லது. அப்படி செய்யும்போது கருமையாகுதல், துர்நாற்றம், அதிக புகை அல்லது நுரை போன்றவை வந்தால் உடனடியாக  புதிய எண்ணெய்க்கு மாற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.