ரத்தத்தில் உள்ள கழிவுகளை அளவுக்கு அதிகமான நீரை பிரித்து சிறுநீராக வெளியேற்றும் பணியை சிறுநீரகம் செய்கிறது. முதுகின் அடிபகுதியில் பீன்ஸ் விதை வடிவில் இருக்கும் இரண்டு சிறுநீரகங்களும் 10 முதல் 15 செ.மீட்டர் வரை உயரமும் 160 கிராம் எடையும் கொண்டவை. இந்த சிறுநீரகத்தில் ரத்தத்தை சுத்தம் நெஃப்ரான்கள் 10 இலட்சம் அளவு உள்ளது. இதில் தான் ரத்தகுழாய் வடிகட்டி உண்டு.



சிறுநீரகத்தில் ரத்தம் போகும் போது இவை வடிகட்டி கழிவுகளை ஒரு குழாய் வழியாக வெளியேற்றி தாது உப்பு கிரகிக்கப்படுகிறது. இப்படி நாள் ஒன்றுக்கு தோராயமாக 190 முதல் 200 லிட்டர் ரத்தத்தை சுத்தம் செய்கிறது. சிறுநீரகம் இப்படி வெளியேற்றும் கழிவானது 1. 8 லிட்டர் அளவாக உள்ளது. இதன் பணிகள் சீராக செயல்படும் வரை பிரச்சனையில்லை. ஆனால் இவற்றில் தொய்வு ஏற்படும் போது சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.


ரத்த சர்க்கரை கட்டுப்பாடு:



நீரிழிவு இருப்பவர்கள் மட்டும் தான் என்றில்லை எல்லோருமே இதை கட்டுக்குள் வைக்க வேண்டும். உடலின் இன்சுலின் சுரப்பு குறைவாக இருக்கும் போது ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். சிறுநீரகங்கள் ரத்தத்திலிருந்து குறிப்பிட்ட அளவு மட்டுமே சர்க்கரையை வெளியேற்றும். இவை அதிகமாகும் போது சிறுநீரகத்தின் பணி மேலும் அதிகரிக்கிறது.


வேலை பளுவால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட கூடும். மேலும் ரத்தத்தில் இருக்கும் ஊட்டச்சத்துகள், ரத்த சிவப்பு அணுக்கள், புரதத்தையும் இவை வெளியேற்றிவிடுகிறது. சர்க்கரை அதிகமாக இருக்கும் போது ரத்தகுழாய்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் சிறுநீரகத்தின் உள்ளே இருக்கும் ரத்தக்குழாயால் ரத்தத்தை சுத்திகரிக்க முடியாமல் போகிறது. நச்சுகள் உடலில் தங்குகிறது. எப்போதும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதன் மூலம் சிறுநீரகத்தை பாதுகாக்க முடியும்.




​ரத்த அழுத்தம் கவனிக்கவும்:


உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருக்கும் போது அது சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவருக்கு நீரிழிவு நோய், இதய நோய் அல்லது அதிக கொழுப்பு போன்ற உடல் நல பிரச்சனை இருக்கும் போது உயர் ரத்த அழுத்தமும் ஏற்பட்டால் உடலில் பாதிப்பு உண்டாக கூடும்.


ரத்த அழுத்தமானது 120/80 என்னும் அளவில் இருக்கும். இதயம் சுருங்கும் போது 120 -ம் இதயம் விரிவடையும் போது 80 - இருக்க வேண்டும். ரத்த அழுத்தம் 140/90 க்கு மேல் இருந்தால் உயர் ரத்த அழுத்தம் இருக்கலாம். ரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது ரத்தகுழாயின் சுவர் பாதிக்கப்படலாம்.


இது சிறுநீரகத்தில் இருக்கும் ரத்தக்குழாயையும் சேர்த்து பாதிப்பதால் ரத்தக்குழாய் தளர்வுற்று குறுகி இறுக்கம் அடைகிறது. இதனால் போதுமான ரத்தம் சிறுநீரக குழாய்க்குள் செல்ல முடியாமல் போகிறது.உங்கள் ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் சிறுநீரகத்தை பாதுகாக்க முடியும்.




உடற்பயிற்சி செய்யுங்கள்:


உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உடற்பயிற்சிகள் எல்லாமே சிறுநீரக நோய்க்கான அபாயத்தையும் குறைக்க கூடும். சீரான உடற்பயிற்சி செய்வதால் உடலில் ரத்த அழுத்த அபாயம் குறைகிறது. இதனால் இதய ஆரோக்கியம் அதிகரிக்க செய்கிறது. இந்த இரண்டுமே சிறுநீரக பாதிப்புகளை குறைக்கிறது.


உடற்பயிற்சி செய்யுங்கள் என்பதால் நீங்கள் கடுமையான பயிற்சி செய்யவேண்டும் என்பதில்லை. சாதாரணமாக நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஜாக்கிங் செய்வது போன்றவை கூட ஆரோக்கியமானவை.




​உடல் எடையை கட்டுக்குள் வையுங்கள்:


உடல் பருமன் ஆகும் போது அவை இதய நோய், மூட்டுவலி போன்று சிறுநீரகத்தையும் பாதிக்க செய்யும். ஏனெனில் அதிகப்படியான கொழுப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும். அதிக எடை கொண்டவர்களுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு உண்டாகும் போது அவை வேகமாக பாதிப்பை உண்டாக்கிவிடக்கூடும். அதிலும் நீரிழிவு உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனை கொண்டிருந்தால் அவை மேலும் பாதிப்பை அதிகரிக்க கூடும். உடல் பருமனை உண்டாக்கும் சோடியம் நிறைந்த உணவுகள் , பதப்படுத்தப்பட்ட உணவுகள் இறைச்சிகள் போன்றவை மேலும் வேகமாக பாதிப்பை உண்டாக்கும் என்பதால் அதையும் தவிர்ப்பது நல்லது.




​உடலை நீரேற்றமாக வைத்திருங்கள்:


உடலுக்கு எப்போதும் நீர்ப்பற்றாக்குறை இருக்க கூடாது. தினமும் 2 லிட்டர் தண்ணீரை அவசியம் குடிக்க வேண்டும். இது சிறுநீரகத்தை பாதுகாக்கிறது என்று சொல்வதை விட உடலை நீரேற்றமாக வைக்க உதவுகிறது. சிறுநீரகங்கள் செயல்புரிவதில் நீர்ச்சத்தும் அதிகமாக இருந்தால் அது சோடியம் மற்றும் நச்சுக்களை எளிதாக பிரித்தெடுக்க முடியும் அதன் பணி எளிதாகும். இது நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான ஆபத்தையும் குறைக்கிறது.


உங்கள் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பது உங்கள் வாழ்க்கை முறையை பொறுத்தது என்றாலும் தாகம் எடுத்தால் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை தவிர்த்து நிறைவாக தண்ணீர் குடிப்பது அவசியம்.