காலம் மாறி வரும் நிலையில் இன்று நம்மில் பலருக்கும் ஏசி ரூமில் அமர்ந்து வேலை செய்வதால் வியர்வை என்ற ஒன்றே இல்லை. ஒரு காலத்தில் நம் உடல் நன்றாக வேலை செய்கிறது என்பதை வியர்வை மூலம் அறிந்து மகிழ்வோம். இன்று அதே வியர்வை ஒவ்வாமையாக மாறி விட்டது. உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும், அதைச் சமநிலையில் வைக்க தோல் வழியாக இயற்கையாக வெளியேறுவதே வியர்வையாகும்.
இது ஆவியாகும்போது உடலானது குளிர்வடைகிறது. இத்தகைய வியர்வையை தூண்ட அதிக வெப்பநிலை, கடுமையான வேலை, உடற்பயிற்சி, பயம், பதற்றம் என பல காரணிகள் இருக்கும். அதேசமயம் வியர்வை சிலருக்கு அதிகமாக வரும். சிலருக்கு வரவே வராது. பலருக்கு குறைவாக வரும். தோலில் உள்ள பாக்டீரியாக்கள் வியர்வையை சிதைக்கும்போது துர்நாற்றம் உருவாகிறது. இத்தகைய வியர்வை உங்கள் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் என்றால் நம்ப முடிகிறதா?... வியர்வை எப்போது ஒரு பிரச்சனையின் அறிகுறியாக என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும்.
வியர்வை சொல்லும் சேதி என்ன?
ஒரு மனித உடலில் சுமார் இரண்டு முதல் நான்கு மில்லியன் வியர்வைச் சுரப்பிகள் இருக்கிறது. இவை உடலின் வெப்பநிலையை சமப்படுத்துகிறது. உங்கள் உடலில் வெப்பம் அதிகரிப்பதை உணரும்போது மூளை வியர்வையை வெளியிட சுரம்பிகளுக்குச் செய்தி அனுப்புகிறது. எனவே எப்போது வியர்த்தாலும் அதனை நல்ல விஷயமாகவே பார்க்கப் பழகுங்கள்.
வியர்வையானது தோலுக்குக் கீழே உள்ள சுரப்பிகளில் உருவாகி நுண்ணிய குழாய்கள் வழியாகப் பயணிக்கிறது. இதன்பின்னர் மேற்பரப்பை அடைந்து காற்றில் ஆவியாகிறது. இந்த இயற்கையான செயல்முறை குறிப்பாக உடற்பயிற்சி செய்யும்போதும் அல்லது வெப்பமான காலநிலையிலும் சீரான உடல் வெப்பநிலையைப் பராமரிக்க உதவுகிறது. இது 99 சதவிகிதம் நீரால் ஆனது.
மீதமுள்ள 1% உப்புகள், தாதுக்கள், அமினோ அமிலங்கள், யூரியா மற்றும் பிற நுண் சேர்மங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் வியர்ப்பது மாறுபடும். மரபியல், உடல் அளவு, ஹார்மோன்கள், மருந்துகள், மன அழுத்தம், பதட்டம் என பல வகை காரணங்கள் இதற்கு சொல்லப்படுகிறது. வியர்வைக்கு கிட்டத்தட்ட மணம் இருப்பதில்லை என்ற சூழலில் தோலில் உள்ள பாக்டீரியாக்கள், வியர்வையில் உள்ள புரதங்களையும் கொழுப்புகளையும் சிதைக்கும்போது துர்நாற்றம் உண்டாகிறது.
Also Read: வெப்ப அலை எச்சரிக்கை - உடலுக்கும் மனதிற்கும் வெயில் ஏற்படுத்தும் 10 ஆபத்துகள் - தப்பிப்பது எப்படி?"
சில உணவுகள் மற்றும் மருந்துகளும் இந்த துர்நாற்றத்தை உடலில் உண்டாக்கக்கூடும். உடலைக் குளிர்விக்க வியர்ப்பது அவசியம் என்ற நிலையில் அது வரவே இல்லை என்றால் மிகவும் ஆபத்தானது. இது உடல் வெப்பநிலையைச் சீராக்குவதைக் கடினமாக்கி, வெப்பம் தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன.உடல் வெப்பநிலை 40°C-க்கு மேல் உயரும்போது தலைச்சுற்றல், குமட்டல், தலைவலி மற்றும் தசைப்பிடிப்பு போன்ற அறிகுறிகள் உண்டாகலாம். இது மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்.
சில நேரங்களில் நம் சட்டைகளின் காலர் பகுதிகளில் மஞ்சள் நிற கறை இருப்பதைக் காணலாம். இது அலுமினியச் சேர்மங்களுடன் வியர்வை வினைபுரியும்போது இத்தகைய கறைகள் உருவாகின்றன. சில துணிகளில் வெள்ளை கறைகள் உருவாகும். இது வியர்வை ஆவியான பிறகு இருக்கும் காய்ந்த உப்பினால் உண்டாகிறது. வியர்வையை முழுமையாகத் தடுப்பது ஆபத்தான ஒன்றாகும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
