காதல். வாழ்க்கையில் ஒரு முறையாவது காதல் வயப்படாமல் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால், ஒருவர் மீது ஏற்படுவது வெறும் ஈர்ப்பா, அல்லது காதலா என தெரிந்து கொள்ள இந்தந்த வழிமுறைகளில் தெரிந்து கொள்ளலாம் என இல்லையென்றாலும், ஒருவரின் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளின் வெளிப்பாடால் அறிந்து கொள்ளலாம். நீங்கள் இவர்கள்மீது காதல் வயப்பட்டுள்ளீர்களா என தெரிந்து கொள்ள வேண்டுமா? ஒரு டெஸ்ட் செய்யலாம், வாங்க!


1. பகிர்ந்து கொள்ளுதல்


உங்களுக்கு அந்த நபரை பிடித்திருக்கிறது என்றால் எல்லைகள் இன்றி அவர்களோடு உங்களது துக்கம், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முடியும். நீங்கள் ஒருவரை முழுமையாக நம்பும்போது, உங்களுக்கானவர் என உணரும்போது, தயக்கம் இன்றி பேசவும், பகிர்ந்து கொள்ளவும் முடியும். உங்கள் வாழ்வில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை, சம்பவங்களை முதலில் அவரிடம் பகிர்ந்து கொள்ள விருப்பப்படுவர். 


2. இயல்பாக இருக்க நினைத்தல்


சினிமா கதைகளைப் போல இயல்பாய் இல்லாத விஷயங்களை செய்ய முயற்சிக்காமல், அவருடன் இயல்பாய் இருக்க பிடித்திருந்தாலே உங்களுக்கு ஏற்றவர் என்பதை தெரிந்து கொள்ளலாம். அவரை ஈர்க்கவும், கவனம் செலுத்தும் வகையிலான செயல்களை செய்யாமலும், உங்களுக்கு பிடித்தது போல இயல்பாய் இருக்க நினைத்தாலே, அவர்தான் சரியான நபர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.


3. நேரம் செலவிடுதல்


மிஸ்ஸிங்! இது ஒரு கடினமான காலக்கட்டம். உங்களுக்குப் பிடித்தவருடன் கூட இருக்க நினைக்கும்போது நேரம் செலவிட முடியாதபோது மிஸ்ஸிங் ஃபீல் எட்டிப்பார்க்கும். முடிந்தவரை ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு  தேவையான நேரத்தில் நேரம் செலவிடவும். உங்களது அலுவலக பணிகளை, பிற வேலைகளை சரியாக சமாளித்துவிட்டு அவர்களோடு நேரம் செலவிட நினைக்கிறீர்கள் என்றால் நீங்கள் உங்களது நேரத்தை அவருக்காக ஒதுக்காக தயாராகிவிட்டீர்கள் என சொல்லலாம். 


4. பாதுகாப்பாக உணர்தல்


வாழ்வில் அனைவருக்கும் பெர்சனல் விஷயங்கள் இருக்கும். யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாதபடி தயக்கம் இருக்கலாம். உங்களது கடந்து கால வாழ்க்கை நிகழ்வுகளை, எதிர்கால கனவுகளை பகிர்ந்து கொள்ள நினைக்கும் நபரிடம் பாதுகாப்பாக உணர்ந்தால்,அவர்கள் உங்களுக்கு ஏற்றவரே. ஆனால், சரியான நபரிடம்தான் பகிர்ந்து கொள்ளப்போகிறோமா என்பதை மட்டும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.


5. புரிந்து கொள்ளுதல்


நேரம் செலவிடுவதல் எவ்வளவு முக்கியமோ, அதே சமயம் பேச முடியாதபோது புரிந்து கொள்வதும் மிக முக்கியம். அலுவலக பணியின்போது, முக்கிய நிகழ்வுகளின்போது சரியாக பேச முடியவில்லை எனில், ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வது அவசியம். உங்களுக்கு பிடித்தவர், அன்புக்குரியவர் சரியாக நேரம் செலவிடாதபோது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள், அதே புரிதல் அங்கிருந்தும் வெளிப்படுகிறது எனில், தயங்காமல் அந்த நபரிடம் உங்களது காதலை சொல்லிவிடுங்கள்.