ஆட்டுப்பால் என்பது உலகம் முழுவதுமே பரவலாக அருந்தப்படும் ஒரு பானம் தான். 65 முதல் 72% வரையிலான சர்வதேச பால்பயன்பாடு ஆட்டுப்பால் தான். இதற்குக் காரணம் ஆடுகளைப் பராமரித்தலில் உள்ள சுலபம். பெரும்பாலான வளரும் நாடுகளில் ஆட்டுப்பால் பிரதானமாக இருக்கிறது.


அதுமட்டுமல்லாத ஆட்டுப்பாலில் உடல் நலத்தைப் பேணும் நிறைய குண நலன்கள் இருக்கின்றன. ஆட்டுப்பாலனின் புரதமும், கொழுப்பும் நிறைவாக உள்ளன.


இது குறித்து ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் ரேகா ராதாமோனி கூறியதாவது:


என் குடும்பத்தில் புதிதாக பிறக்கும் குழந்தைக்கு ஆட்டுப் பாலை புகட்டுவார்கள். குழந்தைகளுக்கும் ஆட்டுப்பாலே தருவார்கள். ஆனால் காரணம் கேட்டால் அவர்களுக்கு விளக்கம் கொடுக்கத் தெரியாது. ஆயுர்வேதம் நம் கலாச்சாரத்திலேயே என்பதற்கு இதுவே நல்ல உதாரணம். அதனால் நாம் கலாச்சாரத்தையும், பாரம்பர்யத்தையும் போற்றிப் பின்பற்றுவோம். நாம் நம் வேர்களைத் தேடிச் செல்வோம்.  இந்தப் பயணத்தில் நீங்களும் என்னுடன் இணைந்து கொள்ளலாமே! என்று அவர் கூறியுள்ளார்.






ஆட்டுப் பாலின் பயன்கள் என்ன?


ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் ரேகா ராதாமோனி ஆட்டுப்பாலின் நன்மைகளை விரிவாக விளக்கிக் கூறியுள்ளார். முதலில் ஆடுகள் சிறிய உருவத் தோற்றம் கொண்டவை. புல் விரும்பி. நிறைய தண்ணீர் அருந்தக் கூடியவை மற்றும் சுறுசுறுப்பானவை. ஆடுகளில் இந்த எல்லா குணமும் ஆட்டுப்பாலிலும் இருக்கிறது. அதனால் ஆட்டுப்பாலை அருந்திவந்தால்..


* உடலை ஒல்லியாக வைக்க உதவும்.
* சுறுசுறுப்பாக்கும். உடலுக்கு வலு சேர்க்கும்.
* வறட்சியை, வாட்டத்தைப் போக்கும்.
* கபத்தை கட்டுப்படுத்தும்.


ஆட்டுப்பாலில் நிறைய தண்ணீர் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்துவரலாம். தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு நல்ல உணவு. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கையும் சரி செய்யும் தன்மை ஆட்டுப்பாலுக்கு உண்டு என்று மருத்துவர் கூறியுள்ளார்.


ஆட்டுப்பாலில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதால் அதை பருகிவருவது நலம் என்று அவர் பரிந்துரைக்கிறார். அண்ணல் காந்தியடிகள் கூட ஆட்டுப்பால் அருந்திதயதாக தகவல்கள் உண்டு.