கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்திலிருந்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த இரண்டு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் துவக்கிவைத்து கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார்.
இப்பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், தாந்தோண்றிமலை, சுங்ககேட், திருமாலைநிலையூர், பேருந்து நிலையம், ஜவஹர் கடைவீதி வழியாக சென்று திருவள்ளுவர் மைதானத்தில் முடிவடைந்தது. இப்பேரணியில் 300 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் காவல் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணியில் தலைக்கவசம் அணிந்து சென்றால் விபத்தில் பாதிப்பு ஏற்படாது. தலைக்கவசம் அணியாமல் சென்றால் எவ்வாறு பாதிப்படையும் என்பதை காட்சிப்படுத்தும் விதமாக மாறுவேடம் அணிந்து இருசக்கர வாகனத்தில் அமர்ந்து இளைஞர் ஒருவர் கலந்து கொண்டார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தது- கரூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்தில் சிக்குபவர்களின் உயிரிழப்பை தவிர்ப்பதற்காக தலைக்கவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி - வருகின்ற 18.04.2022 தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். அவ்வாறு அணியாதவர்களுக்கு மோட்டார் வாகன சட்டப்படி அபராதம் விதிக்கப்படும்.
மேலும், அரசு அலுவலகங்கள், பெட்ரோல் பங்குகள், நியாய விலைக்கடைகள், அரசு மதுபானக் கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அவர்களுக்கு சேவை நிறுத்தப்பட உள்ளது. எனவே, அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும், அதன் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தலைக்கவசம் அணிந்து தங்களது விலைமதிப்பற்ற உயிரை காப்பாற்றி தங்களது குடும்பத்தாரின் எதிர்காலத்தையும் காப்பாற்ற வேண்டும்.
எனவே, பொதுமக்கள் ஒவ்வொரு முறையும் வெளியில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். அணியாதவர்களை அணியச்செய்ய வேண்டும். பொதுமக்கள் தங்களுடைய நலனுக்காக இந்த இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது என்பதை உணரவேண்டும். இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 52000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுக்கு - நீங்கள் எனக்கு முக்கியம் அப்பா, அம்மா அதனால் தலைக்கவசத்தை அவசியம் அணிந்து இருசக்கர வாகனங்களை இயக்குங்கள் என்று கடிதம் எழுதி அவர்களிடம் படித்துக் காட்டி கையொப்பம் பெற்று தங்கள் பயிலும் வகுப்பறையின் சுவர்களில் பார்வைக்காக ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்துகளில் ஏற்படும் 50 சதவீத மரணங்களுக்கு தலைக்கவசம் அணியாததே காரணமாக அமைகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த தலைகாக்கும் இயக்கத்தில் பங்கேற்று அனைவரும் தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்டி சாலைவிபத்தில் உயிர் இழப்பு இல்லா கரூர் மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார்.