இந்தியாவில் குளிர்காலம் தொடங்கி விட்டது. இப்படியான நிலையில் நம்முடைய உடல் குளிரை தாங்க முடியாமல் பல விதமான உடல்நல பாதிப்புகளை சந்திக்கும். இருமல், காய்ச்சல், சளி, நரம்பு சுருட்டு, கால் வலி, உடல் வலி என சொல்லிக் கொண்டே போகலாம். இப்படியான நிலையில் குளிர்காலத்தில் மாரடைப்பு அதிகமாக ஏற்படும் என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளது. இது ஏன் என்பதை டாக்டர் சுனில் திவேதி ஏபிபி செய்திக்கு அளித்துள்ள தகவலை இங்கு காணலாம்.
மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்
அதாவது, குளிர்காலத்தில் நமது உடலின் வெப்பநிலை வெகுவாக குறையும். வெப்பத்தின் அருகில் நாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கும். இந்த நிலையில் தொடர்ச்சியாக 2 நாட்கள் உடல்நிலை வெப்பம் குறையும்போது சிறிய அல்லது பெரிய அளவிலான மாரடைப்பு பிரச்னை ஏற்படலாம். இது அடுத்த 2 நாட்களில் அறிகுறியாக தோன்றலாம்.
குளிர்காலத்தின் கால நிலை உடல் வெப்பத்தை தக்கவைக்கும் பொருட்டு இரத்த நாளங்களை சுருக்குகிறது. இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக இதயத்தின் செயல்பாடு அதிகரித்து இதய துடிப்பு வேகமெடுக்கிறது. அதேசமயம் இந்த காலக்கட்டத்தில் நாம் குறைவாக தண்ணீர் குடிக்கிறோம். இது இரத்தத்தை கெட்டியாக மாற்றுகிறது.
இது ஹீமோகான்சென்ட்ரேஷன் என அழைக்கப்படுகிறது. இதனால் இரத்தம் ஓட்டம் குறைந்து இதயத்தில் அழுத்தம் ஏற்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே இதய பாதிப்புகள் அல்லது லேசான அடைப்புகள் உள்ளவர்களுக்கு, இரத்த உறைவு உருவாவதைத் தூண்டி மாரடைப்பை ஏற்படுத்தும். மேலும் குளிர் காலத்தில் தோன்றும் சுவாச தொற்று நோய்கள் காரணமாக இதய செயல்பாடு அதிகரித்து மாரடைப்பு அபாயத்திற்கு வழிவகுக்கும்.
தடுப்பதற்கான வழிகள்
குளிர்காலத்தில் உங்கள் உடலை எப்போதும் சூடாக வைத்திருக்க முயற்சியுங்கள். அதிக குளிர் இருந்தால் ஏசி, பேன் இயக்கத்தை குறைத்து வெப்பநிலையை அதிகப்படுத்துங்கள். மேலும் தாகம் இல்லை என்றாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை உடலை நீரேற்றமாக வையுங்கள். ஏதேனும் அசாதாரணமான அறிகுறிகளை உடலில் கண்டால் தாமதிக்காமல் மருத்துவ உதவியை நாடுங்கள்.
குளிர்காலம் என்பது அனைத்து வயதினரையும் பாதிக்கும். வயதானவர்கள், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், சுவாச நோய்கள் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் அல்லது புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களுக்கு மாரடைப்பு ஆபத்து அதிகம் உள்ளது.
(இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் மருத்துவ நிபுணர்களால் வழங்கப்பட்டது. ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. இந்த கட்டுரைக்கு ஏபிபி நாடு பொறுப்பேற்காது)