தமிழ்நாட்டில் 9 பேருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று உறுதியான நிலையில் மத்திய சுகாதாரத்துறை தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டு தலைமைச் செயலாளர் இறையன்புக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘டெல்டா ப்ளஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சென்னை, காஞ்சிபுரம், மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். டெல்டா ப்ளஸ் நுரையீரலை கடுமையாக பாதித்து எதிர்ப்பு சக்தியை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டது. இதனால், பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், குஜராத், ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 48 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 45,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டத்தில் 48 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20 பேருக்கும், தமிழ்நாட்டில் 9 பேருக்கும், மத்தியப் பிரதேசத்தில் 7 பேருக்கும் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரசின் இரண்டாவது அலை இந்தியாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த கொரோனா வைரசின் இரண்டாவது அலையில் உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் காணப்படும் இந்த உருமாறிய கொரோனா வைரசுக்கு டெல்டா வைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது, இந்தியாவில் டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது. இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது. இந்த நிலையில், புதிதாக உருமாற்றம் பெற்றுள்ள டெல்டா பிளஸ் வகை கொரோனா, மூன்றாவது அலைக்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும், மகாராஷ்டிரா, கேரளா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும் இரு தினங்களுக்கு முன்பு மத்திய அரசு கூறியது. மகாராஷ்டிராவின் ரத்னகிரி மற்றும் ஜல்கான் மாவட்டங்களிலும், கேரளாவின் பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் போபால் மற்றும் சிவபுரி மாவட்டங்களிலும் டெல்டா பிளஸ் கொரோனா கண்டறியப்பட்டது.
டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு முதல் மரணம் மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜெயினில் பதிவானது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த பெண்மணி சிகிச்சை பலனின்றி கடந்த 23ஆம் தேதி உயிரிழ்ந்துவிட்டதாக மத்திய பிரதேச அரசு தெரிவித்தது.