ஒமிக்ரானுக்கும் கொரோனாவுக்கும் தொடர்பில்லை என உலக விஞ்ஞானிகள் கருத்துகளைக் கூறிவரும் நிலையில் கொரோனாவின் டெல்டா வேரியண்ட்டும் ஒமிக்ரானும் வெவ்வேறாக இருக்க வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சிலின் முன்னாள் தலைவரும் வைரலாஜிஸ்ட்டுமான டாக்டர் ஜேக்கப் ஜான் தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் சீனாவின் வுகானில் உருவான D614G,ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா மற்றும் காப்பா என அந்த வைரஸ்கள் எதற்கும் ஓமைக்ரானுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒமிக்ரானின் உடனடி நேரடித் தொடர்பு எந்த வைரஸாக இருக்கும் என்கிற விவரம் தெரியவில்லை என்றாலும் வுகான் மாகாணத்தில் உருவான D614G என்னும் கொரோனா வேரியண்ட் உடன் அதற்குத் தொடர்பு இருக்கிறது அதனால்தான் அது தற்போது தோன்றியிருக்கிறது என டாக்டர் ஜான் ஜேக்கப் கூறியுள்ளார்.
அதனால் இரண்டு பெருந்தொற்றுகள் தனித்தனியே உலகத்தைத் தாக்கிக் கொண்டிருக்கிறது என நாம் எடுத்துக்கொள்ள வேண்டும், ஒமிக்ரான் கொரோனாவில் இருந்து மாறுபட்டது அதனால்தான் ஜீனோம் முறை மூலம் அதனைக் கண்டறிகிறோம். மேலும் கொரோனா பாதிப்பு நுரையீரலை பாதிக்கிறது ஆனால் ஒமிக்ரான் தொற்று தொண்டையைத் தாக்குகிறது இதிலிருந்தே அது இரண்டும் வேறுபட்டது என்பதை அறியலாம் என அவர் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக உருமாறிய ஒமிக்ரான் கொரோனா தொற்று பாதிப்பு தற்போ வேகம் எடுத்துள்ளது. இந்தியாவில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் ஆகிய இரண்டு தொற்று வகைகளின் பரவலும் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஒமிக்ரான் பாதிப்பும் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் உலகநாடுகளை மேலும் அச்சுறுத்தும் விதமாக புதிய வகையான மற்றொரு கொரோனா வைரஸ் வகை பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சைப்ரஸ் நாட்டின் ஆராய்ச்சியாளர் லியான்டியோஸ் கோஸ்டிரிக்ஸ் தெரிவித்துள்ளார். அதாவது சைப்ரஸ் நாட்டில் தற்போது டெல்டா மற்றும் ஒமிக்ரைன் வகைகள் சேர்ந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது, ”சைப்ரஸ் நாட்டில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை தொற்று சேர்ந்து புதிய வகையாக மாறி மக்களை பாதிக்க தொடங்கியுள்ளது. இந்த வகை தொற்றுக்கு டெல்டாக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வகை தொற்றில் டெல்டா மரபணுக்கள் ஒமிக்ரான் மரபணுக்கள் போல் உருமாறியுள்ளன. இந்த தொற்று பாதிப்பு தற்போது வரை 25 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இது கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது அதிகமாக பரவியுள்ளது. எனினும் இது ஆரம்ப நிலை என்பதால் இதன் பரவும் வீரியம் ஆகியவை குறித்து தெளிவாக தெரியவில்லை எனக் கூறப்பட்டது.