தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


திருப்பூர் மாவட்டம் காங்கயம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த மு.பெ. சாமிநாதன் பதவி வகித்து வருகிறார். இவர் செய்தித்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். கடந்த வாரத்தில் அமைச்சர் சாமிநாதன் சென்னை மற்றும் திருப்பூரில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மற்றும் பள்ளி கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளின் போது ஆதி திராவிட நலத் துறை அமைச்சர் கயல்விழி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


இந்த நிலையில் அமைச்சர் சாமிநாதனுக்கு லேசான கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனிடையே கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அமைச்சர்  சாமிநாதன் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது.



இந்நிலையில் திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தனது முகநூல் பக்கத்தில் அமைச்சர் சாமிநாதன் நலம் பெற்று வர வேண்டுமென பதிவிட்டுள்ளார். அதில் , “காங்கயம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழக செய்தித்துறை அமைச்சருமான மு.பெ. சாமிநாதன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து வேதனை அடைந்தேன். மு. பெ. சாமிநாதன் அவர்கள் விரைவில் முழுமையாக நலம் பெற்று மக்கள் பணியைச் சிறப்புடன் தொடரவேண்டும் என்று சுற்றுச்சூழல் அணியின் சார்பாக வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இதேபோல பல திமுக நிர்வாகிகள் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நலம் பெற்று வர வேண்டுமென சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.


Vikram Covid Positive | நடிகர் விக்ரமுக்கு உறுதியானது கொரோனா தொற்று..