கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பையும், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்று அரசின் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வாசிக்க பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளியுடன் நின்று பொதுமக்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.





பின்னர், பேருந்துநிலையத்தில் "கொரோனா இல்லா கரூர்" என்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் வைக்கப்பட்டிருந்த கையெழுத்து இயக்க பதாகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கைகழுவு! கவசமிடு! விலகியிரு!" என்ற வாசகத்தை எழுதி கையெழுத்திட்டார். அவரைத்தொடர்ந்து அரசு அலுவலர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் வந்து கொரோனா தொற்றைத் தடுப்பதில் தங்கள் பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் கெயெழுத்திட்டனர். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு வழங்கியுள்ள வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த தகவல்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கும், பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் இருந்தவர்களுக்கும் வழங்கினார்.




 பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
 
கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று முதல் "கொரோனா இல்லா கரூர் - கைகழுவு! கவசமிடு! விலகியிரு!" என்ற தலைப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது. முதல்நாள் நிகழ்வாக கரூர் பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்பு, கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.


 





இரண்டாம் நாளான 02.08.2021 அன்று கரூர் இரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளுவர் மைதானம் வரையில் கொரோனா விழிப்புணர்வு வாகனப்பேரணி நடத்தப்படவுள்ளது. திருவள்ளுவர் மைதானத்தில் சமூக இடைவெளியுடன் மாபெரும் கைகழுவும் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.


மூன்றாம் நாளான 03.08.2021  அன்று கரூர் நகரப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய பதாகைகளை காட்சிப்படுத்தும் நிகழ்வும், அனைத்து வியாபரிகள் சங்க பிரதிநிதிகள் பங்குபெறும் உறுதிமொழி எற்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது.




 
04.08.2021 அன்று நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிப்பவர்களிடம் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்படவுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை வைப்பதற்கான உறைகள் வழங்கப்பட உள்ளது. இந்த உறைகளில் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று விழிப்புணர்வு குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள குறும்படப்போட்டிகளுக்கு வரப்பெற்றுள்ள குறும்படங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரையிடப்பட்டு சிறந்த குறும்படங்களை உருவாக்கியவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. 





05.08.2021 அன்று கொரோனா தொற்று தடுப்பு குறித்த ஓவியப்போட்டி மற்றும் ஸ்லோகன் எழுதும் போட்டிகளில் பங்குபெற்ற படைப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு சிறந்த படைப்புகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. 


06.08.2021 அன்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன எல்.இ.டி. வாகனத்தின் மூலம் கொரோனா தொற்று தடுப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் கிராமங்கள்தோறும் திரையிடப்படுவதற்காக நிகழ்வு துவக்கப்படவுள்ளது. கரூர் பேருந்து நிலையம் மற்றும் ஜவஹர் பஜார் உள்ளிட்ட இடங்களில் கொரோனா குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்துவது.




07.08.2021 அன்று கிராம ஊராட்சிகள் , நகராட்சி வார்டுகளில் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக்கொண்ட பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்காக உழைத்த அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
 
இந்த ஒருவார கால நிகழ்ச்சி என்பது, கொரோனா தொற்றின் தாக்கம் குறித்தும், தொற்றை தடுப்பதற்காக அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்துமான தாக்கமும், விழிப்புணர்வும் பொதுமக்களிடையே ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படுகின்றது. எனவே, பொதுமக்கள் அனைவரும் கொரோனா இல்லாத கரூர் மாவட்டத்தை உருவாக்கிட தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு தெரிவித்தார்.