கொரோனா தொற்றுக்கு எதிரான பைசர் தடுப்பூசியின் நோய் எதிர்ப்புத்தன்மை ஆறு மாதங்களுக்குப் பிறகு குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
தடுப்பூசியின் நோய் எதிர்ப்புத்தன்மை குறித்து, The New England Journal of Medicine என்ற ஆய்வு நிறுவனம் இஸ்ரேல் நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 4868 சுகாதாரப் பணியாளர்களிடம் மருத்துவ பரிசோதனை ஒன்றை மேற்கொண்டது. கிட்டத்தட்ட 6 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் (longitudinal prospective study), ஐஜிஜி எதிர்ப்பொருட்கள் (IgG antibodies), வைரஸை எதிர்க்கும் அணுக்கள் (Neutralizing Antibodies) கணக்கிடப்பட்டன.
ஆய்வில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் சார்ஸ்-கோவ்-2-வுக்கான ஆன்டிபாடிகள் தொடர்ச்சியாகக் குறையத் தொடங்கியது. ஆனால் , அதை விட வைரஸை எதிர்க்கும் அணுக்கள் (Neutralizing Antibodies) அளவு வேகமாக குறையத் தொடங்கியது கண்டறியப்பட்டது.
தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் செழுத்திக் கொண்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஆண்களிடத்திலும், 65 வயது கடந்த மூத்த குடிமக்கள் மத்தியிலும், Immunosuppression (எதிர்ப்பு சக்தியை மழுங்கடிக்கும் நிலை) கொண்டவர்களிடத்திலும் குறிப்பாக கணிசமான அளவில் வைரஸை எதிர்க்கும் அணுக்கள் குறைந்து காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தீவிர பாதிப்பைத் தடுப்பதிலும், மருத்துவமனையில் அனுமதிக்கும் தேவையை குறைப்பதிலும் கொரோனா தடுப்பூசி அதிக பயன் அளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் உள்ள தடுப்பூசிகள் 90-95% வரை தீவிர நோய் மற்றும் உயிரிழப்பை தடுப்பதில் திறன் பெற்றுள்ளன. டெல்டா வைரஸ் உட்பட அனைத்து வகைகளுக்கும் இது பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த நோய் எதிர்ப்புத்தன்மை ஆறு மாதங்களுக்குப் பிறகு குறைந்து வருவதை தர்போதுய் கண்டறிந்துள்ளனர். மேலும், பூஸ்டர் டோஸ்களுக்கான பரிந்துரைகளையும் ஆய்வாளர்கள் முன்வைத்தனர்.
பூஸ்டர் தடுப்பூசி:
வெளிநாடுகளில், கொரோனா தொற்றுக்கு பூஸ்டர் டோஸ் வழங்குவது தொடர்பாக குறைந்தபட்சம் ஏழு வெவ்வேறு தடுப்பூசிகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. இஸ்ரேல் நாட்டில் அனைவருக்கும் மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தும் முயற்சியை அந்த அரசு மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவில் 65 வயது கடந்த மூத்த குடிகளுக்கு மட்டும் பூஸ்டர் தடுப்பூசி நிர்வகிக்கப்படுகிறது.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய ஐசிஎம்ஆர்-என்ஐவி இயக்குநர் டாக்டர் பிரியா ஆப்ரஹாம், எதிர்காலத்தில் பூஸ்டர் டோஸ்களுக்கான பரிந்துரைகள் நிச்சயம் முன்வைக்கப்படும் என்று தெரிவித்தார். இதுகுறித்து கூறுகையில்,
அதிக வருவாய் மற்றும் குறைந்த வருவாய் பெறும் நாடுகளிடையே தடுப்பூசியில் அதிக அளவில் இடைவெளி ஏற்படும் காரணத்தால் உலக சுகாதார அமைப்பு இந்த முயற்சிகளை கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. எனினும், எதிர்காலத்தில் பூஸ்டர் டோஸ்களுக்கான பரிந்துரைகள் நிச்சயம் முன்வைக்கப்படும்.
ஒரு கட்டத்தில், இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள், இரண்டு டோஸ்களில் செலுத்தப்பட்டன. தேசிய நுண்கிருமி நிறுவனத்தில் இது போன்ற மாதிரிகளை நாங்கள் பரிசோதித்ததில் இவ்வாறு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட நோயாளிகள் பாதுகாப்பாக இருப்பதை கண்டறிந்தோம். அவர்களுக்கு எந்தவிதமான தீவிர பாதிப்பும் தென்படவில்லை. அவர்களது நோய் எதிர்ப்பு ஆற்றலும் ஓரளவு சிறப்பாகவே இருந்தது. எனவே இவ்வாறு செலுத்துவதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாது. இது தொடர்பாக நாங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம், ஒரு சில நாட்களில் இது பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிவிப்போம்" என்று தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த பல வாரங்களாக தினமும் 20,000க்கும் மேற்பட்ட பாதிப்புகள் சராசரியாக பதிவாகின்றன. குறிப்பாக கேரளா பல்வேறு வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மகாராஷ்டிராவின் சில மாவட்டங்கள் மற்றும் ஒரு சில தென் மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பரவிய சார்ஸ்-கோவ்-2 தொற்றுகளின் மரபணுவை ஆராய்ந்தபோது ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் புதிய வகைகள் உருவாகவில்லை. இரண்டாவது அலையின் இறுதி கட்டமாக, நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாதவர்கள் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குரிப்பிடத்தக்கது.