உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 1,35,266 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 13,990 ஆக உள்ளது.  ஒருநாள் பாதிப்பு 12,895 ஆக இருந்த நிலையில்13,990 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 6,190 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 11 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 2,547 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 


அதேபோல், சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் ஒருநாள் கொரோனா தொற்றின் பாதிப்பு 1,696 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து இரண்டு மாவட்டங்களில் நாளுக்குநாள் தொற்றின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால் சென்னை, செங்கல்பட்டில் நடைபெறும் அனைத்து கூட்டங்களுக்கு தடை போட வேண்டும் என்று ஐசிஎம்ஆர் விஞ்ஞானி ப்ரப்தீப் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அந்த பதிவில், "சென்னையில் கடந்த 6 வாரங்களாக தொற்று பாதிப்பு மேல்நோக்கி செல்கிறது. அதேபோல், சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டிலும் #COVID19 பரவல் மிக அதிகமாக உள்ளது.


எடுக்கப்படும் பரிசோதனையில் 10%க்கு மேல் பாசிட்டிவ் என வருகிறது.  எனவே, இந்த மாவட்டங்களில் அனைத்து கூட்டங்களும் தடைசெய்யப்பட வேண்டும். அத்தியாவசியமற்ற நடவடிக்கைகள்,பயணங்கள் அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும்.






 கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, திருவாரூர், தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் 3 வாரங்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 5% க்கு மேற்பட்ட சோதனைகள் பாசிட்டிவாக பதிவாகிறது. 


கடந்த கால அலைகளில் பார்த்தது போல், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் எப்பொழுதும் பிற மாவட்டங்களை காட்டிலும் அதிகரித்தே இருக்கிறது. எனவே, பொதுஇடங்களில் முககவசம் அணிந்தும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.