கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் 680 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா மூன்றாவது அலை கோவையில் தொடங்குகிறது என்ற வதந்தி வாட்ஸ் ஆப்பில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வந்தாலும், தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பில் முதலிடத்தில் நீடித்து வருகிறது. இந்நிலையில் ”இந்தியாவே திரும்பிப் பார்க்க வைக்க போகும் கோவை - நஞ்சுண்டாபுரம்” எனத் தொடங்கும் ஒரு வதந்தி, கோவையில் உள்ள வாட்ஸ் ஆப் குழுக்களில் கடந்த இரண்டு நாட்களாக காட்டுத்தீயாக பரவி வருகிறது. அச்செய்தி, கடந்த ஜீன் 9-ஆம் தேதி வரை 965 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 680 பேருக்கு பாசிட்டிவ் வந்துள்ளது. இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் கொரோனா மூன்றாவது அலையை சேர்ந்தது. கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் குழந்தைகளுக்காக ஆக்சிஜன் வசதி கொண்ட 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என நீள்கிறது. இறுதியாக பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம். நஞ்சுண்டாபுரம், இராமநாதபுரம் பகுதிகளை கடக்க வேண்டாம் என்ற அறிவுரையுடன் முடிவடைகிறது. அதிலும் உச்சமாக, செய்தித்தாள்களில் சொல்லப்படும் தொற்று பாதிப்புகள் எல்லாம் பொய், இதுதான் உண்மை என்ற மிகப்பெரிய பொய்யை சொல்கிறது.




இந்த செய்தியை உண்மை என நம்பி பலரும் அதிகளவில் பகிர்ந்து வந்தனர். பலரும் இச்செய்தி குறித்து பரவலாக விசாரிக்க தொடங்கினர். இந்நிலையில் இந்த தகவல்களை மறுத்துள்ள கோவை மாநகராட்சி நிர்வாகம், பொய்யான தகவல் என தெரிவித்துள்ளது. மேலும் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கோவை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நஞ்சுண்டாபுரத்தில் அதிகமான அளவில் உருமாறிய கொரோனா பாதிப்பு பொதுமக்களிடையே அதிகளவில் பரவி உள்ளதாகவும், அதனால் அவ்விடத்தில் பொதுமக்கள் பலர் இறந்துள்ளதாக சில விஷமிகள் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். நஞ்சுண்டாபுரத்தில் நோய் தாக்கத்தை கண்டறிய இதுவரையில் மொத்தம் 650 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் கடந்த பத்து நாட்களில் 56 நபர்களுக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.




அப்பகுதி உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல் இருப்பவர்களை கண்டறிந்து, தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் உதவிகள் உடனுக்குடன் செய்யப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் இதுபோன்ற பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் பொய்யான தகவல் பரப்பிய விஷமிகள் மீது மேல் நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.