தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற உடன் பல்வேறு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் கடந்த மாதம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனை பேரில் கடந்த 7-ஆம் தேதி முதல் கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மட்டும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஏனைய மாவட்டங்களுக்கு பல்வேறு தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு முதலமைச்சர் பிறப்பித்தார். இந்நிலையில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து மாவட்டத்தில் தோற்று இல்லாத மாவட்டமாக உருவெடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொரோனா தோற்று மாவட்டத்தில் கட்டுப்படுத்தும் நோக்கில் நாள்தோறும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் கொரோனா சம்பந்தமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தகவல்களையும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக நாள்தோறும் நோயாளிகள் எண்ணிக்கை மற்றும் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களையும் நாள்தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கரூர் மாவட்டத்தில் இதுவரை 19,967 நபர்கள் கொரோனா தொற்று சிகிச்சையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . கொரோனா தொற்று சிகிச்சையில் உள்ள 17,133 நபர்கள் சிகிச்சை முடிவுற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு 2,543 நபர்கள் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 620 நபர்களும், தனியார் மருத்துவமனைகளில் 402 நபர்களும், கொரோனா பராமரிப்பு மையத்தில் (CCC) 112 நபர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,409 நபர்கள் மருத்துவ உதவிகளுடன் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று மட்டும் கொரோனா சிகிச்சை முடித்து 350 பேர் வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனா பரிசோதனை 01.04.2021 அன்று முதல், இன்று வரை 1,17,222 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கரூர் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதுமான அளவில் ஆக்ஸிஜன் இருப்பில் உள்ளது. கரூர் மாவட்டத்தில் ஊரடங்கின் போது விதி மீறலில் ஈடுபட்ட வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் மீது இன்றைய தேதி வரை ரூ.77,00,800/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தேதிவரை கரூர் மாவட்டத்தில் 1,17,676 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசால் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கை முழுவதுமாக கடைபிடித்து, அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியில் செல்வதை தவிர்த்து, அரசால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்கவேண்டும் எனவும், முழு ஊரடங்கை கடைபிடிக்காமல் அவசியமின்றி வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு வடநேரே கடும் எச்சரிக்கையுடன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். ஆகவே ,கரூர் மாவட்ட மக்கள் வெளியே சுற்றுவதைத் தவிர்த்து அரசு அறிவித்துள்ள முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு தங்களையும் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும், நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.