சென்னையில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையான ரெலா மருத்துவமனையில் பெங்களூருவைச் சேர்ந்த 4 வயது சிறுவனுக்கு சிறுகுடல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே சிறுகுடல் மாற்று அறுவை சிகிச்சை செய்த மிகக் குறைந்த வயதுடைய நபரான இந்தச் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ததற்காக ரெலா மருத்துவமனையின் பெயர் தற்போது ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்தச் சாதனையின் சான்றிதழ் ரெலா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் முகமது ரெலாவுக்கு வழங்கப்பட்டது. அப்போது அவருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் முதலானோர் அவருடன் இருந்தனர்.
நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சிறுவன் குகன் திடீரென தொடர் வாந்தி எடுக்கும் நிலை உருவானது. வயிற்றில் ஏதேனும் ஏற்பட்டிருக்கலாம் என எண்ணி, குகனின் தந்தை சுவாமிநாதன் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுவனுக்கு volvulus என்ற அபூர்வ நோய் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நோய் ஏற்பட்டால் சிறுகுடல் வளைந்து ரத்த ஓட்டத்தைத் தடை செய்யும் சூழல் உருவாகும்.
இதனை சரிசெய்வதற்காக உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும், சிறுவனின் சிறுகுடலில் ஏற்பட்ட வளைவு முழுமையாக செயலிழந்ததால் அதனை வெட்டி நீக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனை நீக்கிய பிறகு, சிறுவன் குகனின் உடலுக்குத் தேவையான சத்துகள் நரம்பு வழியாகக் கொடுக்கப்பட்டு வந்தன.
அதுவரை நரம்பு வழியாக உணவு உட்கொண்டு வந்த குகன், ரெலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, அவருக்குச் சிறுகுடல் மாற்று மேற்கொள்வது மட்டுமே தீர்வாக முன்வைக்கப்பட்டது. குகனுக்குத் தனது சிறுகுடலின் ஒரு பகுதியைத் தானமாகக் கொடுக்க அவரது தந்தை சுவாமிநாதன் முன்வந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு, செப்டம்பர் 13 அன்று, மருத்துவர் முகமது ரெலா தலைமையிலான மருத்துவக் குழு சுமார் 7 மணி நேரங்கள் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். தன் தந்தையின் உடலில் இருந்து சுமார் 150 செண்டிமீட்டர் அளவிலான சிறுகுடல், சிறுவன் குகனுக்குப் பொருத்தப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சை முடிவடைந்து சுமார் 5 வாரங்களுக்குப் பிறகு, சிறுவன் குகன் முழுமையாக குணம் அடைந்துள்ளார். மேலும், அவரது சிறுகுடல் இயல்பாக செயல்படுவதால், தன் வயதை உடைய பிற குழந்தைகளைப் போல, சுகனும் உணவு உண்டு, இயல்பான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மிகவும் கடினமான இத்தகைய அறுவை சிகிச்சை மேற்கொண்ட ரெலா மருத்துவமனை மருத்துவர்களைப் பாராட்டியுள்ளார்.