இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு அறிகுறி தொடர்பாக ஒரு நபர் சந்தேகப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேச அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் குரங்கம்மை.?
தற்போது குரங்கு அம்மை தொற்று(Monkeypox) பாதிப்பு உள்ள ஒரு நாட்டிலிருந்து, சமீபத்தில் இந்தியாவுக்குப் பயணித்த ஒரு இளம் வயது கொண்ட ஆணுக்கு அந்த நோய் இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட அவரின் உடல்நிலையானது சீராக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவருக்குக் குரங்கு அம்மை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த நோயாளியின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபோன்ற நிலைகளைச் சமாளிக்க நாடு முழுமையாகத் தயாராக உள்ளது என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள்:
இந்நிலையில் சந்தேகத்திற்கிடமான குரங்கு அம்மை தொடர்பான அறிகுறி யாருக்கேனும் கண்டறியப்பட்டால், பரிசோதனை செய்தல் மற்றும், பொது சுகாதாரத் தயார்நிலை தொடர்பாக முன்னெச்சரிக்கைகள் குறித்தும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச (UT) நிர்வாகங்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் திங்கள்கிழமை கேட்டுக் கொண்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான மற்றும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களை கவனிப்பதற்காக மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை மேம்படுத்தவும், தேவையான தளவாடங்கள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் இருப்பதை உறுதிசெய்து, தனிமைப்படுத்தல் வசதிகளை மேம்படுத்தவும் மத்திய அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மேலும் சுகாதார பணியாளர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, குரங்கு அம்மை குறித்தான அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளைப் புரிந்து கொள்ள உதவுவதற்காக, அமர்வுகளை நடத்துமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
அறிகுறிகள்:
காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகு வலி, உடல் சோர்வு மற்றும் நாக்கு மற்றும் வாயில் தொடங்கி உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவும் முன் தோல் வெடிப்பு ஏற்படல் ( நீர் கொப்பளங்கள் )
குரங்கம்மை நோய்த்தொற்றுகள் பொதுவாக 2 முதல் 4 வாரங்களுக்கு இடையில் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
பரவல்:
பாதிக்கப்பட்ட நோயாளியுடன் நீண்டகால மற்றும் நெருங்கிய தொடர்பு மூலம் குரங்கம்மை பரவுகிறது.
பாலியல் உறவு மூலம் பரவுகிறது
நோயாளியின் உடல் / புண் திரவத்துடன் நேரடி தொடர்பு கொள்வதனால் பரவுகிறது
பாதிக்கப்பட்ட நபரின் ஆடைகளுடன் தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் பரவுகிறது.