குடும்பம் மற்றும் வேலை என மாற்றி மாற்றி கவனம் செலுத்துவதில் உங்கள் மீது உங்களால் கவனம் செலுத்த முடியாமல் போயிருக்கலாம். வாழ்க்கை என்பது பல பக்கங்களை பேலன்ஸ் செய்து வாழ்வது என்றாலும் அதில் நம் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்த வேண்டியது அவசியம்.  இதயத்துக்கு ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்குவதற்கான நேரம் இது. அதாவது ஆரோக்கியமான உணவு, உடல் செயல்பாடு மற்றும் முழு இரவு தூக்கம் உட்பட ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வது. 50 வயதை அடையும் வரை இதய நோய்க்கான ஆபத்தை ஏற்படுத்தும் நிலைமைகளைத் தவிர்க்க முடிந்தால், அதன்பிறகு இதயநோய் அண்டாது என ஆய்வுகள் காட்டுகின்றன. அதனால் நமது ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்பது அவசியம்.


அதிக கொழுப்பு, அதிகரித்த இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் புகைபிடித்தல் ஆகியவை இதய நோய் உண்டாவதற்கான காரணங்கள். உங்கள் 20களில் ஆரோக்கியமான மற்றும் புத்திசாலித்தனமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பது உங்கள் இதயத்தின் எதிர்காலத்தை கணிசமாக மேம்படுத்தும். உங்கள் 30 வயதில் ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க இந்த பழக்கங்களை உங்கள் தினசரி விதிமுறைகளில் கொண்டு வருவது பற்றி சிந்தியுங்கள்.




1. சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைத் தொடருங்கள்...


உடல் உழைப்பின்மை இதய நோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நீச்சல் போன்ற கார்டியோ செயல்பாடுகளை உங்கள் உடற்பயிற்சி திட்டத்தில் சேர்ப்பது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கார்டியோவாஸ்குலர் உடற்பயிற்சிகள் உங்கள் இதயத் துடிப்பை உயர்த்துகிறது, இது இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை மேம்படுத்துகிறது.


2. சீரான, ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்
ஆரோக்கியமான உணவு என்பது பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் மற்றும் புரதங்கள் மற்றும் பால் போன்ற உணவுகளிலிருந்து ஏராளமான ஊட்டச்சத்துக்களுடன் சமச்சீரான உணவை உட்கொள்வதைக் குறிக்கிறது. நீங்கள் வயதாகும்போது உங்கள் இதய ஆபத்தை அதிகரிக்கும் அதிக எடை அதிகரிப்பைத் தடுக்க ஆரோக்கியமான உணவுகளை உண்பது அவசியம். அதற்காக அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் பின்வரும் உணவுகளை உட்கொள்ள பரிந்துரைக்கிறது:


பழங்கள் மற்றும் காய்கறிகள்: ஒரு நாளைக்கு குறைந்தது 4.5 கப்
மீன் (காட்லிவர், சால்மன் போன்றவை): வாரத்திற்கு குறைந்தது இரண்டு 3.5-அவுன்ஸ்கள்
நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்கள்: ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று 1-அவுன்ஸ்
நட்ஸ், பருப்பு வகைகள் மற்றும் விதைகள்: ஒரு வாரத்திற்கு முடிந்தவரை உப்பு சேர்க்காத வகைகளைத் தேர்ந்தெடுக்கவும்
சோடியம் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளைக் குறைப்பதும்,பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் சர்க்கரை பானங்களைத் தவிர்ப்பதும் முக்கியம்.


3. புகைபிடிப்பதை குறைக்கவும்
இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் சிகரெட் புகைத்தல் ஆகும். இது இரத்த அழுத்தம் மற்றும் வீக்கத்தை அதிகரிக்கிறது. இது தமனிகளில் கொழுப்பு படிவதை ஊக்குவிக்கிறது.  புகைபிடிப்பவருக்கு அருகில் இருப்பது கூட ஆபத்தானது. இதய பிரச்சினைகள் உள்ள நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் புகைப்பிடிப்பவர்கள். புகைபிடிப்பதை நிறுத்திய உடனேயே இதய நோயின் ஆபத்து குறையத் தொடங்குகிறது மற்றும் புகைபிடிப்பதை விட்டுவிட்டு ஒரு வருடத்திற்குப் பிறகு 50 சதவிகிதமாகக் குறைகிறது.


4. மன அழுத்தத்தை குறைக்கவும்
நீண்ட கால மன அழுத்தம் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது, இது தமனி சுவர்களை சேதப்படுத்தும். மன அழுத்தத்திற்கு என்ன காரணம் என்பதைப் புரிந்துகொண்டு, வேலையில் மன அழுத்தத்தைக் குறைக்க அல்லது உங்கள் மனதையும் உடலையும் அமைதிப்படுத்த வீட்டில் அழுத்தத்தைக் குறைக்க உதவும் மன அழுத்த மேலாண்மை பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். இதில் ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள், தினசரி தியானம் மற்றும் நீங்கள் விரும்பும் ஒன்றைச் செய்ய ஒவ்வொரு நாளும் நேரத்தைக் கண்டறிதல் ஆகியவை அடங்கும்.