Budget 2024: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் தனிநபருக்கு வழங்கப்படும் வரம்பு, இரட்டிப்பாக உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.


ஆயுஷ்மான் பாரத் திட்டம்:


மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கடந்த 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படது. பணவீக்கத்தை சமாளிப்பதற்காகவும், மாற்று சிகிச்சைகள், புற்றுநோய் போன்ற அதிக செலவுகளை ஏற்படுத்தக் கூடிய நோய்களுக்கு எளிதில் சிகிச்சை பெறும் நோக்கிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் பயனாளர்கள் ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச சிகிச்சைகளை பெற முடியும் என அரசு வரம்பு நிர்ணயித்துள்ளது.


வரம்பை ரூ.10 லட்சம் ஆக உயர்த்த திட்டம்:


இந்நிலையில் தான் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கையை அடுத்த மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள், மேலும் ஓராண்டிற்கான காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான முன்மொழிவுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டால், தேசிய சுகாதார ஆணையம் தயாரித்த மதிப்பீட்டின்படி அரசுக்கு ஆண்டுக்கு ரூ.12,076 கோடி கூடுதல் செலவாகும். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு சுகாதார பாதுகாப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும், குடும்பங்களை கடன் சுமைக்கு தள்ளும் மருத்துவ செலவினங்களும் குறையும் என நம்பப்படுகிறது. 


இதையும் படியுங்கள்: ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை - ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம் - 5 நிமிடத்தில் விண்ணப்பிப்பது எப்படி?


பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?


ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள்,  இம்மாத இறுதியில் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூன் 27ம் தேதியன்று நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியவர்களும் காப்பீடு செய்யப்படுவார்கள் என்றும், ஆயுஷ்மான் பாரத் யோஜனாவின் கீழ் இலவச சிகிச்சையின் பலனைப் பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். அப்படி நடந்தால்  இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக 4 முதல் 5 கோடி பேர் பயனடைவார்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன.


நிதி ஆயோக் பரிந்துரை:


2024 இடைக்கால பட்ஜெட்டில், 12 கோடி குடும்பங்களுக்கு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) க்கான ஒதுக்கீட்டை அரசாங்கம் ரூ.7,200 கோடியாக அதிகரித்தது. ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு பணிக்கு (PM-ABHIM) ரூ. 646 கோடியை மட்டுமே ஒதுக்கியது. நிதி ஆயோக் கடந்த அக்டோபர் 2021 இல் வெளியிட்ட அறிக்கையில், மக்கள் தொகையில் 30 சதவிகிதம் பேர் உடல்நலக் காப்பீடு இல்லாமல் உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்தவும் வலியுறுத்தி இருந்தது.