வங்கதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஐந்து சிறுநீரகங்களுடன் வாழ்ந்து வருகிறார். இது ஏதோ பிறவிக் குறைபாடு அல்ல. இயற்கையாக மனிதனுக்கு உள்ள இரண்டு சிறுநீரகங்கள் செயலிழந்ததால் அடுத்தடுத்து பொருத்தப்பட்ட சிறுநீரகங்களையும் சேர்த்து ஐந்து சிறுநீரகங்கள் அவருக்கு உள்ளன.


41 வயது 3 முறை அறுவை சிகிச்சை:


வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் தீபன், 41. தொழிலதிபரான இவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தன. இதனால், அவர் தனது உறவினர் ஒருவரிடம் தானமாக சிறுநீரகம் பெற்றார். ஆனால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் ஒர் சிக்கல் இருந்தது. அந்த நபருக்கு சிறுநீரக செயலிழப்புடன், இதய நோய் மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் குறைபாடு இருந்தது. இதனால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் எனக் கூறப்பட்டது. இதனால், மருத்துவர்கள் மாற்று வழியை யோசித்தனர். இதற்காக மருத்துவக் குழுவினர் பலகட்ட ஆலோசனையை மேற்கொண்டனர். அப்போது தான், செயலிழந்த சிறுநீரகத்தை அப்புறப்படுத்தாமல் மற்றொரு சிறுநீரகத்தைப் பொருத்துவது என முடிவு செய்யப்பட்டது. அப்படியே பொருத்தவும் பட்டது. ஆனால், ஒரே ஆண்டில் அவரது புதிய சிறுநீரகமும் செயலிழந்தது. அப்போதும் மனம் தளராத தொழிலதிபர், இன்னொரு உறவினரை தனக்கு சிறுநீரகம் தானமாகத் தர ஏற்பாடு செய்தார். திரும்பவும் அதே சிக்கல் ஏற்பட இந்த முறை மூன்று செயலிழந்த சிறுநீரகங்களுடன் நான்காவது சிறுநீரகத்தைப் பொருத்தினர். 2008 ஆம் ஆண்டு இந்த அறுவை சிகிச்சை நடந்தது.


சென்னைக்கு வந்த தொழிலதிபர்..


வங்கதேசத்தில் 2 முறை அறுவை சிகிச்சை செய்துவிட்ட பின்னர், 3வது அறுவை சிகிச்சைக்காக அவர் சென்னை வந்தார். சென்னை தமிழகத்தின் மருத்துவத் தலைநகர் மட்டுமல்ல உலகளவில் வெளிநாட்டவர் பலரும் மருத்துவ சிகிச்சைக்காக அணுகும் நகரமாகவும் இருக்கிறது.
தீபனும் சென்னை வந்தார். சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள மெட்ராஸ் மெட்டிக்கல் மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


மருத்துவர் சரவணன் விளக்கம்:


ரத்த தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சரவணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீபனுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். சொல்லி வைத்தார் போல் தீபனின் உறவினர் இந்த முறையும் சிறுநீரகம் தானமாகக் கொடுத்திருக்கிறார். ஐந்தாவது சிறுநீரகம் பொருத்தப்பட்டது குறித்து மருத்துவர் சரவணன் கூறியதாவது:
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை பொறுத்தவரை, இரண்டு சிறுநீரகங்கள் செயலிழந்தால், மூன்றாவதாக பொருத்தப்படும். செயலிழந்த சிறுநீரகங்கள் சுருங்கியிருக்கும், அவை அப்புறப்படுத்தப்படும். ஆனால், இந்த நபருக்கு மற்ற உபாதைகளும் இருப்பதால் அவருடைய செயலிழந்த சிறுநீரகங்களை அப்புறப்படுத்த இயலவில்லை. இப்போது இந்த 4 சிறுநீரகங்களையும் அகற்றிவிட்டு ஐந்தாவது சிறுநீரகத்தைப் பொருத்தினால், அவருடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் ஐந்தாவது சிறுநீரகம் விரைவில் செயலிழந்துவிடும். இதனாலேயே அவருடைய மற்ற சிறுநீரகங்களை அப்புறப்படுத்தாமல் ஐந்தாவது சிறுநீரகத்தைப் பொருத்தியுள்ளோம்.
ஆனால், வழக்கமாக முதுகுப் பகுதியில் தான் இதனைப் பொருத்துவோம். ஏற்கெனவே 4 சிறுநீரகங்கள் அங்கே இருப்பதால் ஐந்தாவது சிறுநீரகத்தைப் பொருத்த இடமில்லை. அதற்காக டிராஸ்பெரிடொனீஸ் என்ற முறையைப் பின்பற்றி, குடலுக்குப் பக்கத்தில் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது.


இவ்வாறு மருத்துவர் சரவணன் தெரிவித்தார்.


இப்போது அந்த தொழிலதிபர், தனது ஐந்து சிறுநீரகங்களுடன் வாழ்ந்து வருகிறார்.