உங்கள் உடல் மற்றும் மன நலத்திற்குப் பல நன்மைகளைத் தரும் உடற்பயிற்சிகளில் ஒன்றான பின்னோக்கி நடத்தல் பற்றியும், அதன் பயன்கள் பற்றியும் நாம் காணலாம்.
நாம் அனைவருமே உடல்நலத்தை பேண நினைக்கிறோம். தினமும் காலையில் எழுந்து நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுவது, வீட்டில் அல்லது ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது, யோகா, சத்தான உணவுக்ளை எடுப்பது என பலவகைகளை நாம் பின்பற்றுகிறோம். இது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் பலன்களை தரும் என்றாலும் தினமும் காலையில் எழுந்தவுடன் 30 விநாடிகள் பின்னோக்கி நடப்பது, உடலுக்கும் மூளைக்கும் பெரும் நன்மைகளைத் தரும் என சொல்லப்படுகிறது.
இது வேடிக்கையாக தோன்றினாலும் இதன் அருமை யாருக்கும் தெரியவில்லை என பலரும் சொல்கின்றனர். பின்னோக்கி நடப்பது பலருக்கும் கடினமாகவும் அசௌகரியமாகவும் தோன்றினாலும் தொடர்ந்து பயிற்சி செய்தால் இதனால் ஏற்படும் மாற்றங்களை நாம் காண முடியும் என பலரும் தெரிவிக்கின்றனர்.
என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
முன்னோக்கி நடப்பது போல பின்னோக்கி வேகமாக நடக்க முடியாது. நமக்கு பொறுமையும், உடல் கட்டுப்பாடும் தேவைப்படுகிறது. இதனால் உடல் சமநிலை மேம்படுத்தப்படுகிறது. உடல் மீதான விழிப்புணர்வு அதிகரிக்கிறது. மாறுபட்டு இந்த உடற்பயிற்சியை மேற்கொள்ளும்போது தொடை பின்பக்கத் தசைகள், கெண்டைக்கால் தசைகள் போன்றவை அதிக செயல்பாட்டுடன் இருக்கிறது. இதனால் இடுப்புக்கு கீழ்ப்பகுதி வலிமை அதிகரிக்கிறது.
மருந்து அல்லது அறுவை சிகிச்சை அல்லாத இயன்முறை சிகிச்சையில் பின்னோக்கி நடப்பது பரிந்துரை செய்யப்படுகிறது. இது முழங்கால்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைத்து மூட்டுகளின் இயக்கத்தன்மையை அதிகரிக்கிறது. இதன்மூலம் கீல்வாதப் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
பின்னோக்கி நடப்பதால் குறைந்த நேரத்தில் அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதயத் துடிப்பு வேகமாக அதிகரிக்கிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது நல்ல பலன்களைத் தரும் என சொல்லப்படுகிறது. பின்னோக்கி நடப்பது ஒரு வழக்கமான தருணமாக இல்லாததால் மூளை அதிகமாக செயல்பட வேண்டியிருக்கிறது. இதனால் நினைவாற்றல் மேம்படுகிறது. கவனச்சிதறல் தடுக்கப்பட்டு எதிர்வினை ஆற்றும் நேரம் துரிதமாகிறது. இதனை காலையில் செய்வது அன்றைய நாளை சுறுசுறுப்பாக இயங்க கைகொடுக்கும்.
பின்னோக்கி நடப்பது உடலை நிமிர்ந்து நிற்க உதவுகிறது. குறிப்பாக கூன் விழும் சூழலில் இருப்பவர்களுக்கு சிறந்த உடற்பயிற்சியாகும். பிட்டத்தசைகளும் இடுப்புத் தசைகளும் வலுப்பெற்று நரம்பு மண்டலமும் தூண்டப்படுகிறது. உங்கள் மூளை புத்துணர்ச்சி பெறுவதால் மன அழுத்தம், மன சோர்வு போன்றவை சரியாகும். வெறும் 30 வினாடிகள் கூட இந்த பயிற்சியைப் பெற நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
ஒருவேளை நீங்கள் பின்னோக்கி நடக்க விரும்பினால் ஒரு வெற்று இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முதலில் மெதுவாக நடக்கத் தொடங்குங்கள். கைப்பேசியைப் பார்த்துக் கொண்டே செய்யக்கூடாது. பேசிக்கொண்டும் இருக்கக்கூடாது. 30 வினாடிகளுடன் தொடங்கி படிப்படியாக நேரம் அதிகரிக்கலாம். வாரத்திற்கு 4-5 நாட்கள் இதைச் செய்வது போதுமானது.
(இவை அனைத்தும் உடற்பயிற்சி பற்றிய தகவல்கள் மட்டும் தான். மேலும் தகவல்களுக்கு தகுதிவாய்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை மேற்கொண்ட பின் மேற்கொள்ளவும். இதற்கு ஏபிபி நாடு பொறுப்பேற்காது)
