மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் 13 வயது சிறுமி ஒருவர் அடினோ வைரஸ் தொற்றுக்கு பலியானார். இதனை அரசு சுகாதார துறையும் உறுதி செய்துள்ளது.


காரக்பூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி உர்ஜஸ்வதி ராய் சவுத்ரி. இவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இத்துடன் காய்ச்சலும் இருந்தது. இதனையடுத்து அந்தச் சிறுமி பிப்ரவரி 15 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு வென்டிலேட்டர் பொறுத்தப்பட்டது. அவருடைய ரத்த மாதிரிகளை சோதித்தபோது அவருக்கு அடினோவைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது. சிறு வயதிலிருந்தே தசை சிதைவு நோயாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருந்துள்ளது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (பிப்.22) காலை அந்தச் சிறுமி உயிரிழந்தார். 


மேற்குவங்கத்தில் சமீப காலமாக அடினோ வைரஸ் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரியில் இருந்து தேசிய காலரா மற்றும் குடல்தொற்று நோய்கள் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகளில் 32 சதவீதம் அடினோ வைரஸ் தொற்று உறுதியானது. இது குறித்து சுகாதாரத் துறை இயக்குநர் சித்தார்த் நியோகி கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒட்டுமொத்த சுகாதாரத் துறையின் கவனமும் கொரோனா தொற்றில் இருந்ததால் இது போன்ற பாதிப்புகள் கவனம் பெறாமல் போய்விட்டன. இப்போது கொரோனா ஓய்ந்துள்ள நிலையில் மக்கள் மற்ற நோய்களுக்கான பரிசோதனைகளையும் செய்து கொள்கின்றனர். சமீப காலமாக அடினோவைரஸ் பாதிப்பு அதிகரிக்க சோதனைகள் அதிகரித்துள்ளதும் காரணம் என்றார்.


அடினோ வைரஸ் என்றால் என்ன?


அடினோ வைரஸ் என்பது நடுத்தர அளவிலான வெளிப்புற அரண் இல்லாத வைரஸ். இதை ஆங்கிலத்தில் நான் என்வலப்ட் வைரஸ் எனக் கூறுகின்றனர். சாதாரண சளி, ஃப்ளூ காய்ச்சலுக்கும் இது காரணமாக இருக்கிறது. மொத்தம் 50 வகை அடினோவைரஸ்கள் உள்ளன. இவற்றில் சில குளிர் காலத்தில் மட்டும் மக்களைத் தாக்கும்.


அடினோ வைரஸ் அறிகுறிகள் என்ன?


சாதாரணமாக ஏற்படும் சளி, காய்ச்சல், தொண்டை வலி, சுவாசப் பாதையில் தொற்று, நெஞ்சு சளி, நிமோனியா, மெட்ராஸ் ஐ, வயிற்றோடம், வாந்தி, குமட்டல், அடிவயிற்றில் வலி ஆகியன ஏற்படலாம். 


சிகிச்சை என்ன?


கொரோனா வைரஸ் போல் அடினோ வைரஸுக்கு என்று தனிப்பட்ட சிகிச்சை ஏதும் இல்லை. ஆன்ட்டி வைரல் மருந்துகள் தரப்படும். வலிகளுக்கு ஏற்ப வலி நிவாரணி வழங்கப்படும். கைகளை சானிட்டைசர் கொண்டு சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். வெளியில் இருக்கும்போது சானிடைஸ் செய்யாத கைகளால் கண், மூக்கு, வாய் ஆகியனவற்றை தொடுவதைத் தவிருங்கள். இது நோய்கள் மிகுந்த காலமாக இருப்பதால் தனிநபர் ஒவ்வொருவரும் சுகாதாரத்தை, முன்னெச்சரிக்கைகளை பின்பற்றினால் பொது சுகாதாரத்தின் மீது பெரிய அழுத்தங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். 


அடினோ வைரஸுக்கும் தடுப்பூசி உள்ளதாம். ஆனால் அது இப்போதைக்கு பொது மக்கள் மத்தியில் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லையாம். அமெரிக்க ராணுவம் மட்டும் தமது வீரர்களுக்கு இந்த அடினோ வைரஸ் தடுப்பூசியை செலுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நோய்கள் மலிந்து போவதைப் பார்த்தால் இனி தடுப்பூசிகள் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்வதே கடினம் என்ற நிலை வந்துவிடும் போல் என்ற அச்சமும் எழாமல் இல்லை.