உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 9 மாணவர்கள், அவர்களின் ஆசிரியர் என 10 பேருக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டுள்ளது.


சோஹோன் மாவட்டத்தில் கோவிந்த்பூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் தான் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. வட்டார கல்வி அலுவலர் பள்ளியில் உரிய மருத்துவ முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இணை ஆசிரியர் விவேக் குமார் மருத்துவமனையில் உள்ளார்.


கடந்த சனிக்கிழமை பள்ளி வந்த சில குழந்தைகளுக்கு முகத்தில் சிறுசிறு சிவப்பு நிற புள்ளிகள் தோன்றின. சில குழந்தைகள் காய்ச்சல், சோர்வுடன் இருந்தனர். இந்நிலையில் 9 குழந்தைகளுக்கும் ஓர் ஆசிரியருக்கும் சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


சின்னம்மை எப்படிப் பரவும்? என்ன செய்ய வேண்டும்?


சின்னம்மை ஒரு தொற்று நோயாகும். இது அதிகமாகப் பரவக் கூடியது. வேரிசெல்லா-ஜோஸ்டர் என்ற வைரசினால் உண்டாகிறது. பொதுவாக சிறுவர்களுக்கே இந்நோய் ஏற்படும். எனினும் பெரியவர்களுக்கும் நோய்த்தடுப்பு மண்டலம் பலவீனமானவர்களுக்கும் வரக்கூடும். இதனால் பொக்களம், அரிப்பு, களைப்பு மற்றும் காய்ச்சல் உண்டாகும். இருமுவதனாலும் தும்முவதனாலும் காற்றின் மூலம் சின்னம்மை பரவும். கொப்புளங்களில் இருந்து வெளிப்படுபவற்றைத் தொடுவதாலும் மூச்சின் வழி உள்ளிழுப்பதாலும் உண்டாகக் கூடும்.


நோயுள்ள ஒருவர் மூலம் பரவும் இந்நோயின் நோயரும்பும் காலம் 10-21 நாட்கள் ஆகும். கொப்புளம் அரும்புவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து அனைத்து கொப்புளங்களும் வெளிப்படும் வரை சின்னம்மை மிகவும் பரவும்.


அறிகுறிகள்:


கொப்புளம் போன்ற சமச்சீரான கட்டிகள் முதலில் உடலின் நடுப்பகுதியில் தோன்றி பின் முகம், கை, கால்களுக்குப் பரவும்
அரிப்பு
குறைந்ததில் இருந்து மிதமான காய்ச்சல்
முதுகு வலி
தலைவலி
பசியின்மை
உடல்நலம் இல்லாதது போன்ற உணர்வு (அசதி)


சின்னம்மை தொற்று நோயாகும். அதாவது தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளாத ஒருவருக்கு நோய் வாய்ப்பட்ட மற்றொருவரிடம் இருந்து பரவும். இது வேரிசெல்லா-ஜோஸ்டர் என்ற வைரசால் பரவுகிறது. இருமல் அல்லது தும்மும்போது காற்று வழி பரவும். தலைதுவட்டும் துண்டு மூலமும், கைகுலுக்கல் போன்ற தொடர்புகளாலும் பரவும்.


நுண்ணோக்கிச் சோதனை: வேரிசெல்லா-ஜோஸ்டர் வைரசை ஆய்வகம் மூலம் உறுதிப்படுத்த, கொப்புளப் பகுதிகளே தெரிந்து கொள்ளப்படுகின்றன. பாலிமெரேஸ் தொடர்வினை அல்லது நேரடி எதிர்பொருள் ஒளிர்வு முறையில் வைரஸ் கண்டறியப்படுகிறது.


ரத்த சோதனை: கொப்புளங்கள் இல்லாதபோது இரத்த சோதனை மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு கடும் நோயாளிகளின் வேரிசெல்லா IgG அளவு கணக்கிடப்படுகிறது. இது முன்செய்யப்பட்ட நோய்காணலை உறுதிப்படுத்தும். ஆனால் நோய்த்தடுப்பாற்றல் குறைவு பட்டவர்களுக்கு நம்பகத்தன்மை கொண்டதல்ல.


அரிப்புக்குக் கோலமைன் லோஷன், கொலாய்டல் ஓட்மீல் குளியல் போன்றவை சிறிதளவு நிவரணம் அளிக்கும். கொப்புளங்களைக் கீறுவதனால் தோல் தொற்று பரவாமல் இருக்க நகங்களை வெட்டி வைத்திருக்க வேண்டும்.