அன்றாட வாழ்க்கை ஓட்டங்களுக்கு மத்தியில், ஆண்கள் பலர் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் கொள்வதில்லை. உடல் தங்களுக்கு அடிக்கும் எச்சரிக்கை மணியை கவனிக்காமல் உதாசீனப்படுத்துகிறார்கள். ஆண்கள் கண்டிப்பாக புறக்கணிக்க கூடாத சில விஷயங்களை மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
நெஞ்சு வலி
ஆண்கள் புறக்கணிக்கக் கூடாத பொதுவான அறிகுறிகளில் இது முக்கியமானதாகும். இது பெரும்பாலும் இதயம் தொடர்பான பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக இருந்தாலும், மார்பு வலிக்கு மேலும் சில காரணங்களும் இருக்கலாம். எனவே இந்த அறிகுறியை புறக்கணிப்பது உயிருக்கு ஆபத்தானது.
மூச்சு திணறல்
திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ, அல்லது தொடர்ந்து மூச்சுத் திணறல் இருந்தாலோ அதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக ஏதாவது கடினமான வேலைகள் செய்து கொண்டிருக்கும்போதோ அல்லது ஓய்வின் போதோ ஏற்பட்டால் கண்டிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது ஆஸ்துமா, நாள்பட்ட அடைப்புக்குரிய நுரையீரல் நோய் (சிஓபிடி) போன்ற நிலைகளின் அறிகுறியாக இருக்கலாம்.
திடீர் எடை இழப்பு அல்லது அதிகரிப்பு
திடீரென அதிகமாக எடை இழப்பு அல்லது அதிகரிப்பு ஏற்படும்போது அது, சில உடல்நலப் பிரச்சினைகளைக் குறிக்கலாம். திடீர் எடை இழப்பு புற்றுநோய், ஹைப்பர் தைராய்டிசம் அல்லது செரிமான கோளாறுகள் போன்ற அடிப்படை நிலைமைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். மாறாக, எடை அதிகரிப்பு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் அல்லது வளர்சிதை மாற்ற சிக்கல்கள் காரணமாக ஏற்படலாம்.
சோர்வு மற்றும் சோம்பல்
அதிகப்படியான சோர்வு, சோம்பல், அல்லது வழக்கமாக இருப்பதைவிட ஆற்றல் குறைவாக உணர்தல் போன்றவை ஒரு சாதாரண நிலை அல்ல. தொடர்ச்சியான சோர்வு இரத்த சோகை, மனச்சோர்வு, தூக்கத்தில் மூச்சுத்திணறல் அல்லது தைராய்டு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளின் அறிகுறியாக இருக்கலாம். ஒட்டுமொத்த நல்வாழ்வை மீட்டெடுப்பதற்கு அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்வது முக்கியம்.
குடல் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள்
ஆண்கள் தங்கள் குடல் பழக்கவழக்கங்களில் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டால் அதில் கவனம் செலுத்த வேண்டும். தொடர்ந்து வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது மலத்தில் இரத்தம் செல்வது போன்ற பிரச்சனைகள் இரைப்பை குடல் பிரச்சினைகள் அல்லது பெருங்குடல் புற்றுநோயைக் குறிக்கலாம். சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால், உயிரைக் காப்பாற்றலாம்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீரில் இரத்தம்
அடிக்கடி சிறுநீர் கழித்தாலோ, சிறுநீரில் இரத்தம் கசிந்தாலோ அதனை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த அறிகுறிகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், சிறுநீரக கற்கள் அல்லது புரோஸ்டேட் புற்றுநோய் உட்பட பல பிரச்சனைகளைக் குறிக்கலாம். இந்த நிலைமைகளை திறம்பட நிர்வகிப்பதற்கும் சாத்தியமான சிக்கல்களைத் தடுப்பதற்கும் ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிகிச்சை மிக அவசியம்.
தொடர் முதுகுவலி
முதுகுவலி ஒரு பொதுவான பிரச்சனை, ஆனால் அது நீண்ட காலத்திற்கு நீடித்தாலோ அல்லது வேறு சில அறிகுறிகளுடன் சேர்ந்து வந்தாலோ, அதைப் புறக்கணிக்கக்கூடாது. தொடர்ச்சியான முதுகுவலி முதுகுத்தண்டின் பிரச்சனைகள், சிறுநீரக பிரச்சனைகள் போன்ற பல பாதிப்புகளால் கூட இருக்கலாம்.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.