உணவே மருந்து என்ற திருமூலர் திருமந்திரம் அருளிய பூமியில் வாழ்கிறோம். ஆனால் அன்றாடம் ஆயிரத்தெட்டு வாழ்வியல் நோய்க்காக மருத்துவமனைக்கு ஓடிக் கொண்டிருக்கிறோம். நம் முன்னோர்கள் வகுத்துவைத்தது போல் உணவுப் பழக்கவழங்களை மாற்றிக் கொண்டால் நல்லது.


சில நேரங்களில் நமக்கு எளிதில் கிடைக்கும் உணவின் மாண்பினை நாம் அறிவதில்லை. முருங்கையை நாம் கொல்லையில் வைத்துவிட்டு மறந்துபோகிறோம் ஆனால் அதை மொரிங்க பல்ப், பவுடர் என ஏற்றுமதி செய்து சிலர் வாழ்வாங்கு வாழ்கின்றனர். வெளிநாட்டில் அதனை போட்டா போட்டி போட்டு வாங்குகின்றனர். அந்த வரிசையில் மரவள்ளிக் கிழங்கும் உண்டு.


மரவள்ளிக்கிழங்கில் இத்தனை நன்மைகளா..?


இந்த கட்டுரையைப் படித்தால் மரவள்ளிக் கிழங்கில் இத்தனை நன்மைகளா என்று நீங்கள் வியந்து பாராட்டுவீர்கள். உணவுப் பழக்கத்திலும் கொண்டு வருவீர்கள்.


மரவள்ளிக்கிழங்குகள் உலக அளவில் அதிகம் விளையும் ஆப்பிரிக்க நாடுகளில், மரவள்ளிக்கிழங்கே, முக்கிய உணவுப் பொருளாக விளங்குகிறது, ஏழை மக்களுக்கு பஞ்ச காலங்களிலும் போர்க் காலங்களிலும் உணவாகப் பயன்பட்ட மரவள்ளிக்கிழங்கில், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்C சத்து மிகுந்துள்ளது. 


சுறுசுறுப்பு:


கேரள மக்களின் தினசரி உணவில் தவறாமல் இடம்பெறும் மரவள்ளிக்கிழங்கும் சீரகத்தண்ணீருமே, அவர்களின் சுறுசுறுப்புக்கும், வியாதிகள் அணுகாத் தன்மைக்கும் காரணம் என்றால், அது மிகையில்லை. மரவள்ளிக்கிழங்கு மாவில் தோசை, அடை, உப்புமா போன்ற எல்லாவகை சிற்றுண்டிகளும், இனிப்பு கார வகைகளும் செய்யலாம். மரவள்ளிக்கிழங்கை சமையலில், சாம்பாரில் சேர்க்கலாம், அல்லது கூட்டு, பொரியலாக செய்யலாம். அதன் அற்புதத்தை இப்போது பார்க்கலாம். 


மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளையும் வெளியேற்ற உதவுகின்றன. செரிமான மண்டலத்தை சீராக்கி, மென்மையான குடல் இயக்கத்துக்கு வழிவகுக்கிறது.


வைட்டமின்கள்:


மரவள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. இதில் இருக்கும் போலேட் (folate) மற்றும் வைட்டமின் சி ஆகியவையும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது. பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் ஆன்டிஆக்சிடன்டுகளும் மரவள்ளிக்கிழங்கில் இருக்கின்றன.


இக்கிழங்கில் காணப்படும் ஃபோலேட்டுகள் உள்ளிட்ட பி தொகுப்பு விட்டமின்கள் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நரம்புக்குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.


மரவள்ளி கிழங்கில் உள்ள இரும்பு சத்து இரத்த சிவப்பணுக்களை உற்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இரத்த சிவப்பணுக்கள் குறைபாட்டினால் ஏற்படும் அனீமியா உள்ளிட்ட நோய்களை குணப்படுகிறது.


வயிற்றுப்புண், உடல்சூடு:


மரவள்ளி கிழங்கை அன்றாட உணவில் எடுத்துக்கொண்டால், அவற்றில் இருக்கும் நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி உடல் எடையை குறைக்க உதவும். தலைவலி, முதுகுவலி பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கிழங்கை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் ஜூஸாக அரைத்து நாள் ஒன்றுக்கு இருமுறை பருகினால் இந்தப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.


ஞாபக மறதியை குறைப்பதுடன், ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கின்றன. மரவள்ளி கிழங்கில் உருவாக்கப்படும் ஜவ்வரிசிக் கஞ்சி வயிற்றுப் புண் மற்றும் உடல் சூட்டைக் குறைக்கவும் பயன்படுகின்றன. மரவள்ளி கிழங்குகளில் இருக்கும் வைட்டமின் கே மற்றும் கால்சியம் ஆகியவை எலும்புகளை வலுவாக்குகின்றன.


மரவள்ளியானது அதிகளவு கார்போஹைட்ரேட்டைக் கொண்டுள்ளது. இதனால் உடல் எடையினை அதிகரிக்க விரும்புவோர் இக்கிழங்கினை உண்டு பயன் பெறலாம்.