இப்போதெல்லாம் குக்கிராமங்களில் கூட சானிட்டரி பேட் பயன்படுத்தும் பழக்கம் வந்துவிட்டது. ஆனால் சானிட்டரி பேட் பயன்படுத்துவதிலும் சிறு சிக்கல் உள்ளது. அது பயோ டீகிரேடபிள் இல்லை என்ற விமர்சனம் ஒருபுறம் உடலில் சில அழற்சிகளை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு இன்னொரு புறம் கருப்பைவாய் புற்றுநோய் கூட சானிட்டரி பேட்களில் உள்ள கெமிக்கல்களால் ஏற்படுகின்றன என்ற தகவலும் உள்ளன. இதற்கு மாற்றாக காட்டன் பேட், ஆர்கானிக் பேட் போன்ற பொருட்களும் சந்தையில் வந்தவண்ணம் தான் உள்ளன.


இந்நிலையில், மாதவிடாய் காலத்தில் சானிட்டரி பேட்களுக்கு மாற்றாகப் புழங்கக் கூடிய பொருட்களும் சந்தைக்கு வந்தாகிவிட்டன. அவற்றைப் பற்றி பார்ப்போம்.


மென்ஸ்ட்ரூவல் கப் Menstrual Cups:


மென்ஸ்ட்ரூவல் கப் (மாதவிடாய் கோப்பை). இது, மருத்துவம் சார்ந்த எந்த ஒரு உபகரணமாக இருந்தாலும் அதனை மருத்துவரிடம் ஆலோசித்தே பயன்படுத்த வேண்டும். அதனால் பெண்கள் தங்களின் மகப்பேறு மருத்துவரைப் பார்த்து ஆலோசிக்க வேண்டும். அவர் நமது பெல்விக் ஃப்ளோர் தசையின் வலுவை அறிந்து பரிந்துரைப்பார். ஒருவேளை சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்ற பெண்களுக்கு சிறிய கோப்பைகளையும், 30 வயதுக்கு மேற்பட்ட நார்மல் டெலிவரி கண்ட அதிக உதிரப்போக்குள்ள பெண்களுக்கு பெரிய கோப்பைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஏற்கெனவே டாம்பூன் பயன்படுத்தியவர்களுக்கு இது எளிதாக இருக்கும். புதிதாக பயன்படுத்துபவர்கள் ஓரிரு முறையில் கற்றுக் கொள்ளலாம்.சிலிக்கான் அலர்ஜி உள்ளவர்களுக்கு மென்ஸ்ட்ரூவல் கோப்பை பொருந்தவே பொருந்தாது.  அதை மருத்துவரிடம் முதலிலேயே சொல்லிவிடவும். மென்ஸ்ட்ரூவல் கோப்பையை 6 முதல் 12 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். இல்லை சிறுநீர் கழிக்கச் செல்லும் போது அதை வெளியில் எடுத்து க்ளீன் செய்துவிட்டு மீண்டும் இன்சர்ட் செய்து கொள்ளலாம்.


இந்த கோப்பையை ஒவ்வொரு நாளும் சுடு தண்ணீரில் கழுவி, மென்ஸ்ட்ரூவல் கப் க்ளீனர் கொண்டு சுத்தப்படுத்தலாம். கடினமான சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்தால் மீண்டும் நீங்கள் கோப்பையை உள்ளே செலுத்தும்போது அரிப்பு, எரிச்சல் ஏற்படலாம்.




ரீ யூஸபிள் சானிட்டரி பேட் (Reusable Sanitary Pads):


துவைத்துப் பயன்படுத்தக் கூடிய சானிட்டரி பேட்கள் வந்துள்ளன. இவை ரெகுலரான சானிட்டரி பேட்களைவிட மிருதுவானவை. இவை ஆர்கானிக் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இவற்றை துவைத்து வெயிலில் உலர்த்தி மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதால் காசு சிக்கனமானதும் கூட. வெந்நீரில் மிதமான சோப் உபயோகித்து அலசி சுத்தப்படுத்தலாம். 


பீரியட் அண்டர்வேர் (Period Underwear):


பீரியட் அண்டர்வேர் என்பது சானிட்டரி பேடுடன் கூடிய உள்ளாடை. இவை உதிரத்தை நன்றாக உறிஞ்சக்கூடிய ஃபேப்ரிக். இதனால் உதிரப்போக்கு அதிகமாக இருந்தாலும் கூட அது கசிந்து உங்களின் உடையில் ஒட்டாது. கறை ஏற்படுமோ என்று நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை. அண்டர்வேரில் உள்ள ஃபேப்ரிக்கை எடுத்து அலசி துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம். 


வழக்கமான சானிட்டரி பேட்களுக்கு மாற்றாக புதிய மருத்துவ உபகரணங்கள் வந்துவிட்டாலும் கூட அவற்றை ஆரம்பத்தில் பயன்படுத்தும் போது பதற்றம், பயம் இருக்கலாம். இரண்டு, மூன்று மாதவிடாய் சுழற்சிக்குப் பின்னர் எல்லாம் சரியாகிவிடும்.