தமிழா தமிழா (Tamizha Tamizha) நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. 


தமிழா தமிழா நிகழ்ச்சி


சின்னத்திரையில் நேரம், காலம் பாராமல் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. இவற்றில் விவாத நிகழ்ச்சிகள் எப்போதும் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும். அந்த வகையில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சி தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை தற்போது ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். சிறிய இடைவெளிக்குப் பின் இந்நிகழ்ச்சி ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. 


இந்த வார நிகழ்ச்சி 


அதில் இந்த வாரம்  “வங்கியில் கடன் வாங்கி வாழ்ந்தவர்கள் vs வீழ்ந்தவர்கள்” என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இதன் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.


வங்கியில் கடன் வாங்கி வாழ்ந்தவர்கள்


அதில் வங்கியில் கடன் வாங்கி வாழ்ந்தவர்கள் வரிசையில் இருக்கும் ஒருவர், “2 கிலோ பிரியாணி செய்து வந்து விற்றேன். இந்த தொழிலை டெவலப் செய்ய வங்கியில் கடன் பெற்றேன். இன்னைக்கு 2 டாடா ஏசி, கார் இருக்குது. 20 பேர் என்னிடம் வேலை செய்கிறார்கள். இதற்கு காரணம் வங்கி தான்’ என சொல்கிறார். இன்னொருவர், ‘1988 ஆம் ஆண்டு 5 ஆயிரம் கடன் வாங்கினேன். இன்னைக்கு 2 பெட்ரோல் பல்க், கேஸ் ஏஜென்ஸி வச்சிருக்கேன். வாழ்க்கை வளர வங்கி கடன் தான் காரணம்’ என சொல்கிறார். 


வீழ்ந்தவர்கள் பகுதியில் குமுறிய நபர்கள் 


‘தேவையில்லாம சமயத்துல கொடுத்த கடனால் நான் வீழ்ந்து விட்டேன்’ என்று ஒருவரும், ‘கடன் வாங்கி என்னுடைய பலன்கள் மூலம் கடனை அடைத்து விடுவேன். இன்னும் 3 ஆண்டுகளில் ஓய்வு பெறும் போது வேலையின்றி நான் ஜீரோவாக இருப்பேன்’ எனவும் மற்றொருவரும் தெரிவித்துள்ளார்.  சர்வீஸ் ஓரியண்ட் பேங்க் ஆக இருந்த வரை பிரச்சினை இல்லை. பிசினஸ் ஓரியண்ட் பேங்க் ஆக மாறும் போது கடன் தருவதில்லை என ஒருவர் தெரிவிக்கிறார்.






இன்னொருவர், ‘நான் ரூ.250க்கு கிரெடிட் கார்டு மூலமாக ஸ்வைப் பண்ணினேன். 2 வருஷம் கழிச்சி எனக்கு ரூ.65 ஆயிரம் கட்ட வேண்டும் என நோட்டீஸ் வருகிறது’ என தெரிவிக்கிறார். இதற்கு விளக்கமளிப்பவர், “கிரெடிட் கார்டு என்பது ஆபத்தான ஆயுதம். நீங்கள் பாக்கி ரூ.1 வைத்திருந்தாலும் 36% வட்டி என்பது இருக்கும்” என தெரிவிக்கிறார். இதைக் கேட்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர், ‘இதற்கும் கந்து வட்டிக்கும் என்ன சார் வித்தியாசம்?’ என கேள்வியெழுப்பும் காட்சிகள் இடம் பெறுகிறது.