இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழாவில் பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல் ஒன்று இடம் பெற்றது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. இந்த பிரமாண்ட விளையாட்டு போட்டியில் 72 நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதன்முடிவில் ஆஸ்திரேலியா 67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம் என 178 பதக்கங்களுடன் முதலிடமும், இங்கிலாந்து 57 தங்கம், 66 வெள்ளி, 53 வெண்கலம் என 176 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும் ,கனடா 26 தங்கம்,32 வெள்ளி, 34 வெண்கலம் என 92 பதக்கங்களுடன் மூன்றாவது இடமும் பிடித்தது. 4வது இடத்தில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றது.
இதனைத் தொடர்ந்து காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழா நேற்று பர்மிங்ஹாமில் உள்ள அலெக்சாண்டர் மைதானத்தில் நடைபெற்றது. அடுத்த காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பல்வேறு இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள், கண்ணை கவரும் வாண வேடிக்கை என பல நிகழ்ச்சிகள் நடைபெற்று பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.
அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ஆர்யா, விஷால் நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளியான அவன் - இவன் படத்தில் இடம் பெற்ற டியா..டியா...டோலு பாடலும் கலை நிகழ்ச்சிகளில் இடம் பெற்றது. இதன் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்