'இர்ஃபான் வியூஸ்' என்ற பெயரில் உள்ளூர் முதல் உலகளவில் உள்ள பல்வேறு உணவுகள் குறித்து அந்த இடத்திற்கு நேரடியாக சென்று வீடியோ வெளியிடுவதன் மூலம் பிரபலமானவர் யூடியூபர் இர்ஃபான். இவரின் சோசியல் மீடியா பக்கங்களை லட்சக்கணக்கான ஃபாலோவர்கள் பாலோ செய்கிறார்கள். அவர் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவுமே மில்லயன் கணக்கான வியூஸ் பெற்று வருகிறது. அந்த வகையில் தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளங்களில் அறிவித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


 




இர்ஃபான் மனைவி ஹசீஃபா தற்போது கர்ப்பமாக இருப்பதால் துபாய் சென்று அங்கு ஸ்கேன் மூலம் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் மூலம் அறிந்துள்ளார். அதனோடு நிற்காமல் அதை அனைவருக்கும் அறிவிப்பதை ஒரு விழாவாக கொண்டாடி அதை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டார். அவரின் இந்த வீடியோ லட்சக்கணக்கான வியூஸ் பெற்றது. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை பரிசோதனை செய்வதும் அதை அறிவிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இர்ஃபானின் இந்த செயலுக்கு கடும் கண்டங்கள் எழுந்து விஸ்வரூபம் எடுத்ததுடன் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.


 




இது தொடர்பாக சுகாதாரத்துறை இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அவர்களை தொடர்பு கொண்டு மன்னிப்பு கோரினார்.  இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிடுவார் என சொல்லப்படுகிறது. இருப்பினும் மருத்துவக்குழு இர்ஃபான் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என தெரிவித்து இருந்தது. இந்நிலையில் மருத்துவ இயக்குநரை நேரில் சந்தித்து இர்ஃபான் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  


சென்னை டி.எம்.எஸ் வளாகத்திற்கு நேரடியாக சென்று மருத்துவ மற்றும் ஊரக நலப்பணி இயக்குநரை சந்தித்து மன்னிப்பு கடிதம் கொடுத்து மன்னிப்பு கோரியதாக கூறப்படுகிறது. அவரின் மன்னிப்பு கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இர்ஃபானுக்கு  நிபந்தனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 


அதாவது கருக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை இர்ஃபான் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இர்ஃபான் கருக்கலைப்பு குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட ஒப்புதல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. விரைவில் சுகாதாரத்துறை இர்ஃபான் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.