நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியது. கொரோனா இரண்டால் அலை வீசுவதால், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அத்துடன் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்கு திரைபிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த இளம் நடிகை ஐஸ்வர்யா லஷ்மி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர், மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். விஷாலுடன் ‘ஆக்ஷன், தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து தடுப்பு முறைகளையும் கடைபிடித்து வருவதாக தெரிவித்த அவர், அனைவரும் முககவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.