தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவானவர்கள் ஏராளம். அந்த வரிசையில் தனித்துமான காமெடி மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் யோகி பாபு. 'மண்டேலா' படத்திற்கு பிறகு அடுத்தடுத்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த வாரம் அவரின் வித்தியாசமான நடிப்பில் வெளியான 'போட்' திரைப்படம் திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இது தவிர மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.



 


இந்நிலையில் 2022ம் ஆண்டு நடிகர் யோகி பாபு மற்றும் லட்சுமி மேனன் இருவரும் இணைந்து 'மலை' என்ற படத்தில் நடித்திருந்தனர். மனிதநேயம் மற்றும் இயற்கையை பற்றி பேசும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த கிராமிய பின்னணி கொண்ட படத்தை லெமன் லீப் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. மிகவும் பிரபலமான இயக்குநர்களான சுசீந்திரன் மற்றும் சீனு ராமசாமியிடம் உதவியாளராக இருந்த ஐபி முருகேஷ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.  


மேலும் இப்படத்தின் வில்லனாக காளி வெங்கட் நடிக்க சிங்கம் புலி, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள மு. காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். லட்சுமி மேனன் சென்னையில் நகரத்தில் இருந்து கிராமத்துக்கு செல்லும் மருத்துவராகவும் நடித்துள்ளார்.


கொங்கினி மலையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் பாடலாசிரியர் யுகபாரதி வெளியிட்டனர். அந்த போஸ்டர் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.