தமிழ்சினிமாவின் பிரபல காமெடியனாக வலம் வரும் நடிகர் யோகிபாபு தற்போது கதையாசிரியராக மாறியிருக்கிறார்.
பிரபல காமெடியனாக வலம் வரும் நடிகர் யோகிபாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் பெயரிப்படாத புதியப்படத்தை Lemon leaf creation நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தை யோகிபாபுவின் நண்பரான ரமேஷ் சுப்ரமணியம் இயக்க இருக்கிறார். இந்தப்படத்தின் பூஜை இன்று தொடங்கி இருக்கிறது.
இது குறித்து இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேசும் போது, “ 2016- ல் எனது இயக்கத்தில் வெளியான வில் அம்பு படத்தில் யோகிபாபு நடித்தார். அப்போது இருந்து அவரை எனக்குத்தெரியும். அவருக்கு என்னுடைய ஃபிலிம் மேக்கிங் ஸ்டைல் பிடித்திருப்பதாகவும், அவருடைய தன்னுடைய பிற ஆர்வங்களை அவர் பயன்படுத்த விரும்புவதாகவும் என்னிடம் கூறினார். மேலும் கடந்த மே மாதம் கதை ஒன்றை எழுதியிருப்பதாகவும், அதை நான் டைரக்ட் செய்ய வேண்டும் என்று கேட்டார்.
நல்ல படைப்பாற்றல்
அவருக்கு திரைக்கதையில் நல்ல சென்ஸ் இருக்கிறது. யோகிபாபு லொள்ளுசபா நிகழ்ச்சியில் துணை இயக்குநராக வேலை பார்த்திருக்கிறார். அவர் உண்மையில் நல்ல படைப்பாற்றல் மிக்கவர். அவருக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும் என்பது அவர் கொடுத்த ஸ்கிரிப்ட்டின் வாயிலாக தெரிந்து கொண்டேன். காமெடி மட்டுமல்ல, மற்ற எமோஷன்களையும் நன்றாகவே வெளிக்கொண்டு வருகிறார். இந்தக்கதை அவர் என்னிடம் கொடுத்த உடன் நாங்கள் இருவரும் அமர்ந்து இந்தக்கதை குறித்து விவாதம் செய்து சில மாற்றங்களை செய்தோம். அதை நல்ல கதை.
இது முழுக்க முழுக்க நகைச்சுவைத் திரைப்படம். ஹீரோவின் இளமைப் பருவ வாழ்க்கை சம்பந்தமான காட்சிகள் இருக்கின்றன. யோகிபாபு குறும்புகள் நிறைந்த நடிகராக வருகிறார். இந்தப்படத்திற்காக உடல் எடையை குறைக்க கேட்டேன். அதற்கான வேலைகளில் அவர் இறங்கி விட்டார்.” என்று பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. நீண்ட காலமாக வாய்ப்புக்காக போராடிய அவருக்கு அமீர் நடிப்பில் வெளியான யோகி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த யோகிபாபு தனது திறமையால் கலகலப்பு, சூது கவ்வும், அட்டக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார். யோகி பாபுவின் காமெடிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக களம் காண ஆரம்பித்தார்.
அந்த வகையில் இவர் நடித்த சிவகார்த்திகேயனின் மான் கராத்தே, ரெமோ, ஐஸ்வர்யா ராஜேஷின் காக்கா முட்டை, அஜித்தின் வேதாளம், விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை, விஜயின் மெர்சல், நயன் தாராவின் கோலமாவு கோகிலா, விசுவாசம், பிகில் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. பிஸியாக நடித்துக் கொண்டிருந்த யோகிபாபு ஒரு கட்டத்தில் தர்மபிரபு, மண்டேலா உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகனாகவும் களம் இறங்கினார். இதில் மண்டேலா திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை தேசிய விருதுகளையும் வென்றுள்ளது.