தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் நடிகர் யோகிபாபு தற்போது கதாநாயகனாகவும் கோலிவுட்டில் கலக்கி வருகிறார்.
யோகிபாபு:
விஜய் தொலைக்காட்சியில் பிரபல நகைச்சுவை நிகழ்ச்சியான 'லொள்ளு சபா' மூலம் தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய யோகி பாபு, அமீரின் யோகி படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
தொடர்ந்து தன் தனித்துவ தோற்றம், நடிப்புத் திறமை காரணமாக சூது கவ்வும் அட்டக்கத்தி, டிமாண்டி காலனி, ஆண்டவன் கட்டளை படங்கள் மூலம் யோகி பாபு கவனம் ஈர்த்தார். தொடர்ந்து மெர்சல், கோலமாவு கோகிலா, விசுவாசம், பிகில் உள்ளிட்ட படங்களில் இவரது கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
இதனையடுத்து தர்மபிரபு, மண்டேலா உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக யோகிபாபு களம் இறங்கினார். இதில் மண்டேலா திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் இவர் நடித்துள்ள பொம்மை நாயகி படம் விரைவில் வெளியாக உள்ளது.
மெடிக்கிள் மிராக்கிள்:
இந்நிலையில் அடுத்ததாக விஜய் டிவி குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தாவுடன் யோகிபாபு ஜோடி சேரும் மெடிக்கல் மிராக்கிள் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஜான்சன். கே இயக்கும் இப்படம் மருத்துவமனையில் நிகழும் விளையாட்டான நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ1 ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் காமெடியான போஸ்டர் யோகி பாபு ரசிகர்களை ஈர்த்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
முன்னதாக வெளியான யோகிபாபுவின் பொம்மை நாயகி பட ட்ரெய்லர் யூட்யூபில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தந்தைக்கும் மகளுக்கும் இடையில் நடக்கும் பாசப்பிணைப்பை சொல்லும் படமாக, வெகுஜன மக்களைக் கவரும் விதத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் இப்படத்தில் யோகிபாபு நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் சார்ந்த கதைக்களத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கடலூரில் முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.