ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தில்,மலையாள நடிகர் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகி உள்ளது.


அஞ்சலி நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலமாக திரையில் தோன்ற உள்ளார்.  நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களை குறிப்பாக பெண் ரசிகைகளை பெற்று தந்தது. அதன் பிறகு சற்று உடல் எடை கூடி காணப்பட்டார். நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேலா மற்றும் ஹே ஜூட் போன்ற படங்களில் நடித்ததால் அவர் முதலில் உடல் எடையை அதிகரித்தார். மேலும் 2017 ஆம் ஆண்டு முதல், இந்த படங்களுக்காக ஏற்றிய எடையைக் குறைக்க அவர், எந்த முயற்சியும் எடுக்கவில்லை.


அவர் அதே தோற்றத்தில் பல படங்களில் நடித்தார். இதனையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிவின்பாலி தனது உடல் எடையைக் குறைத்தார். இந்தப் படத்திலும் அவர் உடல் எடை குறைந்தே காணப்படுகிறார்.


‘ஏழு கடல் ஏழு மலை' (Yezhu Kadal Yezhu Malai) திரைப்படம் 53ஆவது ‘ரோட்டர்டாம்’ சர்வதேச திரைப்பட விழாவின் பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில் தேர்வாகியிருப்பது மிகுந்த உத்வேகத்தைக் கொடுப்பதாக ஏற்கெனவே படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டிருந்தார். 


அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது: “வருகிற 2024, ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெறவுள்ள ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய போட்டிப் பிரிவான பிக் ஸ்க்ரீன் விருதிற்கு பல உலகத் திரைப்படங்களோடு ‘ஏழு கடல் ஏழு மலை’ போட்டியிடுவதில் பெருமை கொள்கிறோம்.


இதை சாத்தியமாக்கிய நிவின் பாலி, அஞ்சலி, சூரி மற்றும் இசையில் எப்போதுமே நுணுக்கமாக விளையாடும் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவினை சிறப்பாகக் கையாண்டிருக்கும் ஏகாம்பரத்திற்கும், படத்திற்கு மிக பக்கபலமாக நின்ற ஆர்ட் டைரக்டர் உமேஷ் குமாருக்கும், ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா, மற்றும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக் குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் இன்று மாலை 5.01 மணி அளவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் க்ளிம்ஸ் வெளியாக உள்ளதாக படக்குழு அறித்துள்ளது. இதற்காக புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.