தமிழ் சினிமாவின் எக்காலத்துக்கும் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ பாடியது பி.சுசீலா என்றாலும் அந்தப் பாடல் என்றதும் அனைவரது நினைவுக்கு வருவது என்னவோ அந்தக் காட்சியில் நடித்த சவுகார் ஜானகி தான்.சாய் வித் சித்ராவில் தன் திரைவாழ்க்கை அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்.தமிழ் தெலுங்கு கன்னடம் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஹானரரி டாக்ட்ரேட் பட்டம் பெற்றவர். நடிகர்கள், ஸ்ரீகாந்த், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எம்.ஜி.ஆர். என தமிழ் திரையுலகில் பலருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அவர் பேட்டியில்..



“நான் ஆகாசவாணியின் ரேடியோ நாடகங்களில் வாய்ஸ் ஆர்டிஸ்ட்டாக நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது வாகினி ஸ்டுடியோஸ் நிறுவனர் பி.என்.ரெட்டி என் குரலைக் கேட்டுவிட்டு என்னைத் தொடர்பு கொண்டு அவருடைய படத்தில் நடிக்க முடியுமா எனக் கேட்டார். அறிமுகப் படமே எனக்கு என்.டி.ராமராவ், எஸ்.வி.ரங்கராவ் என பெரிய கூட்டணியுடன் அமைந்தது. ஸ்டுடியோவுக்கு கையில் ஒரு குழந்தையுடன் நடிக்கச் சென்றேன். முதல் படத்தில் எனக்குக் கிடைத்த சம்பளம் 2500 ரூபாய். படம் பார்ப்பதே குற்றம் எனக் கருதும் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் திருமணத்துக்குப் பின் ஒரு குழந்தையுடன் போய் ஹீரோயினாக நடிப்பதெல்லாம் பெரிய புரட்சி. அது எனக்கு அமைந்தது” என்கிறார். 


தமிழில் வளையாபதி என்கிற படத்தின் மூலம் அறிமுகமான சௌகார் ஜானகி எம்.ஜி.ஆரின் நூறாவது படம் சிவாஜி கணேசனின் 125வது படம் என இரண்டிலும் ஹீரோயினாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தகக்து.”எம்.ஜி.ஆரின் நூறாவது படம் ஒளிவிளக்கு படம் வெளியான சமயம் தலைவர் ப்ரூக்ளினில் மருத்துவமனையில் இருந்தார்.ஆனால் படத்தில் பாடல்கள் அத்தனையும் சூப்பர்ஹிட்.


சூட்டிங்கில் எனக்கும் உடன் நடித்த ஜெயலலிதாவுக்கும் பிரச்னை ஏற்பட்டது. அந்த படத்தில் நடித்தபோது நான் சீனியர். ஜெயலலிதா அப்போதுதான் வளர்ந்து வரும் நடிகை. படத்தில் எம்.ஜி.ஆர்.க்கு பிறகு என் பெயரைப் போடக்கூடாது என ஜெயலலிதாவும் அவரது அம்மா சந்தியாவும் பிரச்னை செய்தார்கள். தயாரிப்பாளர் வாசன் என்னை அழைத்துப் பேசினார். “எனக்கு இதில் விருப்பம் இல்லை. ஆனால் அவர்கள் நிர்பந்திக்கிறார்கள். இல்லையென்றால் படமே ரிலீஸ் ஆகாது என்கிற நிலை என்றார்கள். அதனால் படத்தில் என் பெயர் கடைசியில் வரும். இதனால் எனக்கும் எம்.ஜிஆர், ஜெயலலிதாவுக்கும் நேரடியாகத் தகராறு ஏற்பட்டது.அது என்னுடைய கரியரையே பாதித்தது. ஆனால் நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தமிழ் இல்லையென்றால் தெலுங்கு கன்னடம் என வாய்ப்பு இருக்கவே இருக்கிறது என விட்டுவிட்டேன்” என்கிறார்.