இன்றைய காலகட்டத்தில் யூடியூப் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திரைத்துறையை பொறுத்த வரையில் படத்தின் ட்ரைலரையோ, டீசரையோ அல்லது பாடல்களையோ மக்களிடம் முதலில் கொண்டு சேர்க்கும் ஒரு தளமாக யூடியூப் தான் முதன்மை வகிக்கிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டில் யூடியூப் வரிசையில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள பாடல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
யூடியூப்பில் அதிக அளவிலான வியூஸ்களை மையமாக வைத்து இந்த டாப் 10 பாடல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ரஞ்சிதமே : வாரிசு
தளபதி விஜய் படங்களின் பாடல்களுக்கு என்றுமே தனி வரவேற்பு இருக்கும். அதிலும் அவர் பாடிய பாடல் என்றால் அது பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. அந்த வகையில் தமன் இசையில் 'வாரிசு' திரைப்படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே ரஞ்சிதமே... பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. விவேக் எழுதிய இப்பாடலின் வரிகளுக்கு விஜய் மற்றும் மானசி பாடியிருந்தனர். இப்பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானதில் இருந்து 224 மில்லியன் வியூஸ்களை பெற்றதுடன் வீடியோ பாடலுடன் சேர்த்து மொத்த வியூஸ் 372 மில்லியனை கடந்தது.
காவாலாய : ஜெயிலர்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற 'காவாலாய...' பாடலுக்கு அருண்ராஜா காமராஜ் வரிகளை எழுத ஷில்பா ராவ் மற்றும் அனிருத் இணைந்து பாடி இருந்தார்கள். இந்த பாடல் வெளியான நாள் முதல் யூடியூப்பில் லைக்ஸ்களும் வியூஸ்களும் எகிற தொடங்கின. அந்த வகையில் லிரிக்கல் வீடியோ மட்டுமே 228 மில்லியன் தாண்டிய நிலையில் மொத்தமாக இப்பாடல் 366 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது.
நான் ரெடி தான் : லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் 'லியோ' படத்தில் இடம்பெற்ற 'நான் ரெடி தான்' பாடல் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை ரீல்ஸ் செய்ய வைக்கும் அளவுக்கு பிரபலமானது என்ற ஒன்றே இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பை பற்றி சொல்லிவிடும். விஜய் - அனிருத் இணைந்து பாடிய இந்த பாடல் இந்த ஆண்டின் தெறிக்க விடும் பாடலாக மொத்தம் 239 மில்லியன் வியூஸ் பெற்றது.
வா வாத்தி : வாத்தி
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற 'வா வாத்தி' மெலடி பாடலின் வரிகளை தனுஷ் எழுத ஸ்வேதா மோகன் பாடியிருந்தார். ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த ரம்மியமான பாடல் 166 மில்லயன் வியூஸ்களை பெற்றது.
ஜிமிக்கி பொண்ணு : வாரிசு
தமன் இசையில் வாரிசு படத்தில் இடம்பெற்ற 'ஜிமிக்கி பொண்ணு...' பாடலுக்கு விவேக் வரிகளை எழுத அனிருத், ஜோனிதா காந்தி பாடியிருந்தனர். இவர்களின் காம்போ என்றுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். அந்த வகையில் இந்த பாடல் 185 மில்லியன் வியூஸ் பெற்றது.
ஹுக்கும் - ஜெயிலர்
அனிருத் இசையில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற 'ஹுக்கும்' பாடலை அனிருத் பாடி இருந்தார். ரஜினிகாந்த் மாஸ் பாடலாக வெளியான இப்பாடல் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. லிரிக்கல் வீடியோ 111 மில்லியன் வியூஸ் பெற்ற நிலையில் வீடியோ பாடலுடன் சேர்த்து மொத்தமாக 122 மில்லியன் வியூஸ் பெற்றது.
தீ தளபதி - வாரிசு
விஜய் படங்களில் இடம்பெறும் பெரும்பாலான பாடல்கள் மிக பெரிய வெற்றியை பெரும். ஆனால் அவரின் 'வாரிசு' திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. விஜயின் பாடலை காட்டிலும் நடிகர் சிம்பு ஆடி, பாடி, நடித்த வீடியோ மில்லியன் கணக்கான லைக்ஸ்களை குவித்தது. மொத்தமாக 121 மில்லியன் லைக்ஸ்களை குவித்து கலக்கியது.
காட்டுமல்லி : விடுதலை 1
வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'விடுதலை' திரைப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. இளையராஜாவின் இசையில் இப்படத்தின் பாடல்கள் காதுகளுக்கு இனிமை சேர்த்தன. இன்றைய தலைமுறையினர்களுக்கு அதிரடி பாடல்கள் தான் விருப்பமாக இருந்தாலும் அவை அனைத்தையும் தாண்டி இளையராஜாவின் மெலடி மனதை வருடியது. இளையராஜா எழுதி இசையமைத்த 'வழிநெடுக காட்டுமல்லி...' பாடல் 102 மில்லியன் வியூஸ் பெற்றது.
சில்லா சில்லா :
ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் 'துணிவு'. ஜிப்ரான் இசையில் 'சில்லா சில்லா...' பாடலை அனிருத், வைசாக், ஜிப்ரான் பாடி இருந்தனர். இப்பாடலின் லிரிக்கல் வீடியோ 60 மில்லயன் வியூஸ் பெற்ற நிலையில் முழு வீடியோ 31 மில்லயன் வியூஸ் பெற்றது. இப்படத்தில் மூன்று பாடல்கள் மட்டுமே இடம் பெற்ற நிலையில் இப்பாடல் அதிக வியூஸ் பெற்றது.
படாஸ் - லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான 'லியோ' படத்தில் இடம் பெற்ற 'படாஸ்' பாடலுக்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இப்பாடல் 64 மில்லியன் வியூஸ்களை பெற்றது.
இந்த ஆண்டில் வெளியான பாடல்களில் டாப் 10 வரிசையில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான பாடல்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அதிலும் 5 பாடல்கள் நடிகர் விஜயின் பாடல்கள் இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியலில் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' பாடல்களும் இடம்பெற்று இருந்தன.