2023 வில்லன்கள்


ஹீரோவுக்கு இணையாக ஒரு கமர்ஷியல் படத்தில் மிகவும் முக்கியமானது வில்லன் பாத்திரம். சமீப காலமாக ஹீரோ இமேஜை உடைத்து பல முன்னணி நடிகர்களும் ஹீரோ, வில்லன் என இருவித கதாபாத்திரங்களிலும் நடித்து பட்டையைக் கிளப்பி வருகிறார்கள். அப்படி 2023ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல புதிய வில்லன்கள் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளனர். டெரர் வில்லன், காமெடி வில்லன் என இந்த ஆண்டு அப்படி ரசிகர்களை அதிகம் கவர்ந்த வில்லகன்களின் பட்டியலைப் பார்க்கலாம்.


ஃபகத் ஃபாசில் - மாமன்னன்




மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம், இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று. மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் இந்தப் படத்தில் ரத்தினவேலு என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், வடிவேலுவின் நடிப்பிற்கு நிகராக ஃபகத் ஃபாசிலுன் நடிப்பு இந்தப் படத்தில் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. எந்த அளவிற்கு ஃபகத் ஃபாசிலின் நடிப்பு தத்ரூபமாக இருந்தது என்றால், சாதி வெறி பிடித்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்த காரணத்திற்காக சாதி பெருமை பேசுபவர்கள் ஃபகத் ஃபாசிலையும் தங்களது சாதிக்காரராக நினைத்து கொண்டாடத் தொடங்கி விட்டார்கள்.


சரத்பாபு - போர் தொழில்




அசோக் செல்வன் , சரத்குமார் நடித்த போர் தொழில் திரைப்படம் ஒரு சிறப்பான கிரைம் த்ரில்லர் படமாக வெற்றிபெற்றது. இப்படத்தில் மறைந்த நடிகர் சரத்பாபு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் முக்கிய வில்லன் வேறு ஒறுவர் என்றாலும் சரத்பாபுவின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் பார்வையாளர்களை கொஞ்சம் பீதியடைய வைத்தது என்பது உண்மைதான்!


எஸ்.ஜே சூர்யா - மார்க் ஆண்டனி




எந்தக் கதாபாத்திரம் என்றாலும் சிறப்பாக நடித்துவிடக் கூடிய எஸ்.ஜே.சூர்யா வில்லன் ரோல் என்றால் மட்டும் புதுவிதமான எனர்ஜியை வெளிப்படுத்துவார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்தார். மாடுலேஷன், டயலாக் டெலிவரி, உடல்மொழி என தன்னுடைய தனித்துவமான ஸ்டைல் நடிப்பை இந்தப் படத்திலும் வெளிப்படுத்தி இருக்கிறார்.


விநாயகன் - ஜெயிலர்




ரஜினிகாந்த் நடித்து நெல்சன் திலீப் குமார் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் 600 கோடிகளுக்கும் மேலாக வசூல் செய்தது. இந்தப் படத்தில் வர்மன் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் விநாயகன் நடித்திருந்தார். ரஹ்மான் பாடலுக்கு வைப் செய்வது, ஆசிடில் மூழ்கடித்து எதிரிகளைக் கொள்வது, எந்தா சாரே என்று மலையாளம் கலந்த தமிழில் பேசுவது என, ரசிகர்களை இந்த ஆண்டு அதிகம் கவர்ந்த கதாபாத்திரங்களில் ஒன்று வர்மன் பாத்திரம்!


சஞ்சய் தத் - லியோ




பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கே.ஜி எஃப் படத்தில் அதிரா என்கிற கதாபாத்திரத்தின் மூலம் தென் இந்திய ரசிகர்களை கவர்ந்ததைத் தொடர்ந்து, லியோ திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். லியோ படத்தில் இவரது அந்தோணி தாஸ் கதாபாத்திராத்திற்கு மிகச் சில காட்சிகளே இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் திரையில் வந்த ஒரு சில காட்சிகள் என்றாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார் சஞ்சய் தத்.


சேத்தன் - விடுதலை




மெட்டி ஒலி தொடர் மூலம் பிரபலமான  நடிகர் சேத்தன் உணர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிக்கக் கூடியவர். ஆனால் மனசாட்சி இல்லாத ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் அவர்  நடிக்க முடியும் என்பதை ’  ‘விடுதலை’ படத்தில் காட்டி அசத்தினார். 


சாண்டி மாஸ்டர் - லியோ




மிஷ்கின், அர்ஜூன் , சஞ்சய் தத் என எத்தனையோ வில்லன்கள் லியோ படத்தில் இருந்தாலும் ரசிகர்களை பதற வைத்தவர் சாண்டி மாஸ்டர் தான்.  சாக்லேட் காப்பி என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு சைக்கோவைப் போல் நடித்து மிரளவைத்தார்.


எம். எஸ் பாஸ்கர் - பார்க்கிங்




ஹரிஷ் கல்யாண் நடித்து சமீபத்தில் வெளியான பார்க்கிங் திரைப்படம். நடிகர் எம் .எஸ் பாஸ்கர் வில்லனாக நடித்திருந்தார். ஒரு கார் பார்க்கிங் செய்வதற்காக ஏற்படும் பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப் பட்ட பார்க்கிங் திரைப்படம் இதுவரை யாரும் பார்த்திராத ஒரு தோற்றத்தில் எம்.எஸ்.பாஸ்கரை காட்டியது.


மிஷ்கின் - மாவீரன்




டெரரான வில்லன்களுக்கு மத்தியில் டெரராக இருக்க முயற்சிக்கும் ஒரு காமெடியான வில்லனாக நடித்தவர் மிஷ்கின். மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான மாவீரன் திரைப்படத்தில் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்த ஒரு வித்தியாசமான காமெடி வில்லனாக மிஸ்கின் நடித்திருந்தார். 


ரமேஷ் தர்ஷன் - சித்தா




சித்தார்த் நடித்து மக்களின் பேராதரவைப் பெற்ற சித்த திரைப்படம் இந்த ஆண்டு வெளியான மிகச் சிறந்த படங்களில் ஒன்று. இந்தப் படத்தில் பெண் குழந்தைகளை கடத்தும் சைக்கோ கொலைகாரனாக ரமேஷ் தர்ஷன் நடித்திருந்தார் . எதார்த்தமான இந்தக் கதையில் மிகவும் எதார்த்தமான ஒரு வில்லனாக அவரது நடிப்பு வெளிப்பட்டது. இப்படியான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் துணிச்சலான முயற்சிக்காக அவருக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கலாம்.


 




தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா இந்த ஆண்டு அதிகம் பாராட்டப்பட்ட வில்லன்களில் ஒருவர். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் கொடூரமான ஒரு வில்லனாக நடித்து கவனமீர்த்துள்ளார் நவீன் சந்திரா.