சக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சமர், ஜமீல், சுபத்ரா, வைதேகி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யாத்திசை'.


பிரமிக்க வைத்த ட்ரெய்லர்


முன்னதாக இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பலரையும் பிரமிக்க வைத்தது. நடிகர் விஜய் சேதுபதி , இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் இந்தப் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர். இந்நிலையில், ட்ரெய்லர் வெளியாகி ஆறு தினங்களில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் ஹிட் அடித்து கவனத்தை ஈர்த்துள்ளது.


மேலும் பான் இந்தியா திரைப்படங்களான பாகுபலி, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களுக்கு சவால் விடும் வகையில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளதாக ட்ரெய்லர் பார்த்து ரசித்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


வரலாற்றுக் கதை


7ஆம் நூற்றாண்டில் பாண்டிய இளவரசன் ரணதீரன் ஆட்சியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள வரலாற்றுப் புனைவு இந்தப் படம் எனக் கூறப்படுகிறது.


சோழ சாம்ராஜ்யம் இந்தக் காலத்தில் அதன் ஆட்சியை இழக்கும் சூழலில், மக்கள் காடுகளில் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவது, பாண்டியர்களுக்கு எதிராக எயினர் மற்றும் சோழர்களின் கிளர்ச்சி, தேவரடியார்களின் வாழ்க்கையை போர் எவ்வாறு சீர்குலைத்தது ஆகியவற்றை  மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. 


தொழில்நுட்பக் கலைஞர்கள்


வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் , சிக்ஸ் ஸ்டார் எண்டெர்டெய்ன்மெண்ட்டின் ஜே.ஜே.கணேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்க, தரணி ராசேந்திரன் இயக்கியுள்ளார். சக்ரவர்த்தி இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளார். 


அகிலேஷ் காத்தமுத்து இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், மகேந்திரன் கணேசன் எடிட்டிங்கும், ரஞ்சித் குமார் கலை இயக்கமும் செய்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.


மேக்கிங் வீடியோ


இந்த வீடியோவில் பேசும் இயக்குனர் தரணி,  “யாத்திசையின் உளவியல் அதிகாரம்தான், பேரரசை எதிர்க்கும் ஒரு சிறு குடியின் முயற்சி இது” எனப் பேசியுள்ளார்.


 



மேலும் படத்தின் ஆர்ட் ஒர்க் பணிகள், ஆறு மாதமாக நடிகர்கள் இந்தப் படத்துகாக தயாராகும் விதம்,  கலை இயக்கம், காடுகளுக்குள் படக்குழுவினரின் அசாத்திய உழைப்பு,இசையமைப்பு, விஎஃப் எக்ஸ் பணிகள், ஆக்‌ஷன் காட்சிகள் கொரியோகிராஃபி என பலவும் இந்த வீடியோவில் அடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் ஹிட் அடித்து லைக்ஸ் அள்ளி வருகிறது. யாத்திசை படம் வரும் ஏப்ரல்.21ஆம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: 21 Years of Gemini: ஜெயிக்காது என நினைத்த சரண்.. மொட்டை போட்ட ஏவிஎம் சரவணன்.. மெஹா ஹிட் “ஜெமினி” படம் உருவான கதை..!