கிழக்கு கடற்கரைச்சாலையில் விபத்தின் போது உதவியவர்களுக்கு நடிகை யாசிகா நேரில் சென்று கண்ணீர் மல்க தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தனது தோழியான ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த வள்ளிச்செட்டி பவனி மற்றும் இரண்டு ஆண் நண்பர்களுடன் புதுச்சேரி சென்று இருந்தார். புதுச்சேரியில் பார்டியை முடித்துவிட்டு யாஷிகா ஆனந்த் மற்றும் நண்பர்களுடன் சென்னை திரும்பி வந்த போது, செங்கல்பட்டு மாவட்டம் சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் அவர்கள் வாகனம் அதிவேகமாகச் சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் யாஷிகா ஆனந்த் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனார் அவரது தோழியான வள்ளிச்செட்டி பவனி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த விபத்தில் யாஷிகா ஆனந்த் பலத்த காயமடைந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கடந்த சில மாதங்களாக நடக்க முடியாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அந்நாள்களில் தனது ரசிகர்களிடம் சோசியல் மீடியாக்களின் வாயிலாக பேசி வந்த யாஷிகா, விரைவில குணமாகிவிடுவேன் என்று தெரிவித்து வந்தார். விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்தை பல்வேறு திரையுலகில் நேரில் சந்தித்து விசாரித்து வந்த நிலையில் தான், ரசிகர்கள் பலரும் யாஷிகா விரைவில் குணமாக வேண்டும் என்று பிராத்தனை செய்து வந்தனர். இவர்களின் பிராத்தனையின் விளைவாகத் தான் நான் உடல் நலம் தேறிவிட்டேன் என்று தெரிவித்த யாஷிகா, நேற்று விபத்து நடந்த இடத்திற்குச் சென்றதோடு, விபத்தின் போது தன்னைக்காப்பாற்றிய மக்களை நேரில் சென்று கண்ணீர் மல்க அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.
பின்னர் இந்நிகழ்வு குறித்து பகிர்ந்த யாஷிகா ஆனந்த், விபத்து நடைபெற்ற இந்த இடம் என் வாழ்வில் மறக்க முடியாத இடம் என்றும், இந்த இடத்தில் தான் என் தோழியை வாழ்வில் இழந்தேன் எனவும் வேதனையுடன் தெரிவித்தார். மேலும் விபத்தில் சிக்கித்தவித்த என்னை இந்தப் பகுதி மக்கள் காரினுள் இருந்து வெளியே எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிகழ்வுகள் இப்போதும் என் கண்முன்னே இருக்கிறது. அவர்களுக்கு நன்றியைத்தெரிவிக்கவே நான் இங்கு வந்தேன் எனவும் கூறினார். இதோடு இதுப்போன்ற நல்ல மனிதர்கள் உலகில் இருப்பதால் தான் உலகம் இயங்கிக்கொண்டிருப்பதாகவும் பெருமையுடன் கருத்துக்களைப்பகிர்ந்துக்கொண்டார். எப்போதும் இப்பகுதி மக்களுக்கு நான் மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.