2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் வெளியாகவுள்ள நிலையில், இருவரின் ரசிகர்களிடையே மீண்டும் பழைய மோதல் கலாச்சாரம் தொடங்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 


2023 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா ஜனவரி 15 ஆம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு ஆகிய படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிப்பில், இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘வாரிசு’ . இப்படத்தில்  நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கும் நிலையில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா என நட்சத்திர பட்டாளமே நடிப்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 






தமன் இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் விஜய்யின் குரலில் ரஞ்சிதமே பாடலும், நடிகர் சிலம்பரசனின் குரலில் ‘தீ தளபதி’ பாடலும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதேபோல் நேற்றைய தினம் துணிவு படத்தில் இருந்து ‘சில்லா சில்லா’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இப்பாடல்களின் வரிகளை கவனித்தால் ரசிகர்களிடையே மீண்டும் பழைய மோதல் கலாச்சாரம் தொடங்குவதற்காக எழுதப்பட்டுள்ளதா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். 


குறிப்பாக தீ தளபதி பாடலில் இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே...புதிய எதிரியே வா என்னை எதிர்க்கவே...உன்ன குத்தி உலகமே ஓரானந்தம் அடையுமேதிருப்பி அடிக்கும் போது தான் யாரு நீன்னு புரியுமே ஆகிய வரிகளும், சில்லா சில்லா பாடலில், பின்னால பேசுறவன் எல்லா கிழிஞ்ச டயரு...மத்தவன மட்டம் தட்டி மேல வந்து நோ யூஸ்...கத்துறவன் கத்தட்டுமே தட்டி விடு டைம் பாஸ் ஆகிய வரிகளும் இடம் பெற்றுள்ளது. ஒரு காலக்கட்டத்தில் உச்ச நடிகர்கள் சக நடிகர்களை பாடல்கள் மூலமாக தாக்கி கொள்வது நடந்த நிலையில் சில காலம் அது சற்று ஓய்ந்திருந்தது. தற்போது வாரிசு, துணிவு பாடல்கள் அதனை தொடங்கியுள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. 






இதுதொடர்பாக வாரிசு படத்தில் தீ தளபதி பாடலை எழுதிய விவேக், ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், விஜய்யின் சச்சின் படத்திலும், அஜித்தின் அட்டகாசம் படத்திலும் இந்த மோதல் போக்கு இருந்தது. அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. இது பாடலாசிரியர்கள் அல்லது இசையமைப்பாளர்களின் தீவிர முயற்சியாக இருந்திருக்கலாம். இரு நடிகர்களைப் பற்றிய எனது புரிதலின் படி,  அவர்களுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நான் நினைக்கிறேன். 


பெரிய நட்சத்திரங்களின் படங்களில் இத்தகைய எதிர்ப்பு நிலையை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் நான் வேண்டுமென்றே இத்தகைய சூழ்நிலைகளைத் தவிர்க்க முயற்சிப்பேன்.  2019 ஆம் ஆண்டு ரஜினியின் பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசம் படமும் ரிலீசானது. அப்போது பேட்ட படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றில், 'கொஞ்சம் ஓடிங்கிரு தல வணங்கிடு வர்றது தலைவரு பேட்ட பறக்' என முதலில் வரிகள் எழுதினேன். 


ஆனால் தல என ரசிகர்களால் அஜித் செல்லமாக அழைக்கப்படும் நிலையில், ரசிகர்கள் இந்த வரிகளை கேட்டால் தவறுதலாக நினைக்கலாம் என்பதால், 'கொஞ்சம் ஒடிங்கிரு ஓடி பதுங்கிரு..வர்றது தலைவரு’ என மாற்றி எழுதினேன் என விவேக் கூறியுள்ளார்.