காலம் காலமாக தமிழ் சினிமாவோடு பின்னி பிணைந்த ஒன்று இசை. கடைக்கோடி ரசிகன் வரை ஒரு படத்தை கொண்டு செல்ல முகவரியாக இருப்பதில் முதல் இடம் வகிப்பது இசையே. திரை இசையில் முழுமையாக கர்நாடக சங்கீதத்தை சார்ந்து இருந்த காலம் மாறி 1950 முதல் நாட்டுப்புற இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை உள்ளிட்டவை தமிழ் சினிமாவின் அங்கங்களாக மாறின. 


தமிழ் திரை இசையில் மென்மையான, உணர்ச்சிகரமான மெல்லிசை பாடல்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி வலுவாக நிலை நிறுத்திய பெருமை மாபெரும் இசை ஜாம்பவான் ஏ.எம். ராஜாவையே சேரும் . அவரின் வழியே தமிழ் சினிமாவின் இசையை முழுவதுமாக மெல்லிசை பாடல்களாக இடம்பெயர்ந்து சுமார் முப்பது ஆண்டு காலங்கள் ஆட்சி புரிந்த மாபெரும் வெற்றி கூட்டணி எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி கூட்டணி. அவர்களின் பிரிவுக்கு பிறகும் இசை உலகில் முழுமையாக ஆட்சி செய்து வந்தார் எம்.எஸ். விஸ்வநாதன். அவரின் இசை தரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால் இன்றும் அவரே முதலிடத்தை பிடிப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 


 



 


காலத்தால் அழியாத அழிக்க முடியாத ஏராளமான பாடல்களை கொடுத்ததில் முக்கிய பங்கு வகிப்பவர் கே.வி. மகாதேவன். ஒரு பாடகராக தனது பயணத்தை துவங்கிய ஜி.கே. வெங்கடேஷும் ஒரு சிறந்த இசையமைப்பாளராக இருந்தவர். இசைஞானி என தமிழ் சினிமா கொண்டாடும் இளையராஜாவிற்கு திரையிசை அமைப்பை பயிற்றுவித்தவரே அவர் தான். கன்னட திரையுலகத்தில் கொடி கட்டி பறந்த வெங்கடேஷிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார் இளையராஜா. அதற்கு பிறகு தான் இளையராஜா 'அன்னக்கிளி' பட வாய்ப்பு கிடைத்தது. 



தமிழ் திரையிசையில் நாட்டுப்புற இசையை அடிப்படையாக கொண்டு பாடல்களை அறிமுகப்படுத்திய பெருமை இளையராஜாவையே சேரும்.  அதன் மூலம் ஒரு புதிய யூகத்தை துவங்கி வைத்தவர். 30 ஆண்டுகாலமாக கொடி கட்டிய எம்.எஸ்.வியின் மெல்லிசையை முற்றிலுமாக மாற்றியமைத்தார் இளையராஜா. அவரின் வணீக ரீதியான தொடர் வெற்றி அவரை தமிழ் திரையிசையின் ஒரே முகமாக மாறியது.


அதுவரையில் மோனோ முறை இசை மட்டுமே இருந்து வந்த காலத்தில் முதல் முறையாக ஸ்டீரியோ முறையில் பாடல்களை பதிவு செய்யும் ஸ்டீரியோபோனிக் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர். நடிகர் ரஜினிகாந்த் ஒரு தனி நாயகனாக 1978 ஆம் ஆண்டு நடித்த 'பிரியா' படத்தில் தான் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். 1950 - 1980 வரை தமிழ் சினிமாவில் பாடல்களின்  பொற்காலம் என்றே கூறலாம். இன்றும் தனது தடத்தை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து மண் மனம் மாறாத இசையை நிலைநிறுத்தி வருகிறார் இளையராஜா. 


 



இளையராஜாவின் ஸ்டைலை டோட்டலாக மாற்றி நவீன இசையை ரோஜா படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான். தமிழ் திரையிசையின் போக்கையே முற்றிலுமாக மாற்றி உலக அளவில் பிரபலமானவர் ஏ.ஆர். ரஹ்மான். இப்படி பெரிய பெரிய ஜாம்பவான்கள் இசைத்துறையை ஆண்டு வந்தாலும் சிறு சிறு பனித்துளிகளாக தங்களுக்கான தனித்துமான இசை மூலம் திரையுலகில் ஒரு தனி இடத்தை பிடித்தனர் கங்கை அமரன், சந்திரபோஸ், எஸ்.ஏ. ராஜ்குமார், வித்யாசாகர், கார்த்திக் ராஜா, விஜய் ஆண்டனி, ஸ்ரீகாந்த் தேவா, பரத்வாஜ், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற எண்ணற்ற இசைமைப்பாளர்கள்.


இடையில் கானா பாடல்கள் என்ற  ஒரு தனி ஸ்டைல் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்  இசையமைப்பாளர் தேவா. இப்படி பலதரப்பட்ட இசையை கண்ட தமிழ் சினிமாவில் ராப் மூலம் துள்ளல் இசையை கொடுத்து இன்றைய இளவட்டங்களுக்கு ஏற்ற துள்ளலான இசையை கொடுத்து வருகிறார் அனிருத். அதே போல வெரைட்டி இசை மூலம் இன்றும் மனங்களை வருடி வருகிறார்கள். இமான், யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்கள். 


இப்படி காலகாலமாக தமிழ் சினிமாவில் இசை என்பது படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஒரு மிக முக்கியமான காரணியாக தொன்றுதொட்டு இருந்து வருகிறது.