தி கோட்
தி கோட் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆக்ஷன் , காமெடி , ரொமான்ஸ் என பக்க கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்கி உள்ளதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். பிரசாந்த் , பிரபுதேவா ,சினேகா , லைலா , பிரேம்ஜி , ஜெயராம் , மினாக்ஷி செளத்ரி என பல நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தாலும் அப்பா மகன் என விஜய் நடித்திருக்கும் இரு கதாபாத்திரங்களின் மீது தன் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் இருக்கப் போகிறது.
ரசிகர்களை கவருமா தி கோட் டைட்டில் கார்டு?
அட்லீ தொடங்கி லோகேஷ் கனகராஜ் , தற்போது வெங்கட் பிரபு வரை ஒவ்வொருவரும் விஜயை தங்கள் பார்வையில் புதுமையாக காட்ட முயற்சித்துள்ளார்கள். விஜய் நடித்த எல்லா கதாபாத்திரங்களைவிட கொஞ்சம் மாறுபட்டதாக மாஸ்டர் படத்தில் காட்டினார் லோகேஷ். கேரக்டராக மட்டுமில்லாமல் விஜய்க்கு என்று தனியாக டைட்டில் கார்டு போடும் ட்ரெண்டை லோகேஷ் கனகராஜ் உருவாக்கினார். குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தின் டைட்டில் கார்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
மார்வெல் ஸ்டைடில் விஜயின் கண்களை மட்டுமே வைத்து இந்த டைட்டில் கார்டு உருவாக்கப்பட்டிருந்தது. தற்போது இதேபோல் விஜய்க்கு புதிய டைட்டில் கார்டு ஒன்றை உருவாக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு. கில்லி , போக்கிரி , என விஜய் நடித்த எல்லா கதாபாத்திரங்களும் அனிமேஷன் ஸ்டைடில் மாறிக்கொண்டே வரும் வகையில் இந்த டைட்டில் கார்டு உருவாகியுள்ளது
ஏற்கனவே இந்த டைட்டில் கார்டை ட்ரெய்லரில் பார்த்த ரசிகர்கள் திரையரங்கில் இதைப் பார்க்க ஆவலாக காத்திருக்கிறார்கள். தி கோட் படத்தின் டைட்டில் கார்டு குறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் இப்படி கூறியுள்ளார் “லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் விஜய்க்கு மார்வெல் ஸ்டைடில் ஒரு டைட்டில் கார்ட் போட்டிருந்தார் . அதைப் பார்த்த பிறகு இதை விட மேலாக நாம் என்ன செய்துவிட முடியும் என்று தான் தோன்றியது . ஆனால் அப்படியான ஒன்றை இந்த படத்தில் வெங்கட் பிரபு இறக்கியிருக்கிறார்”
தி கோட் படம் வெளியானப் பின் நிச்சயமாக லியோ மற்றும் கோட் ஆகிய இரு படங்களில் எந்த படத்தின் டைட்டில் கார்ட் சூப்பராக இருக்கிறது என்கிற விவாதம் விஜய் ரசிகர்கள் இடையில் கிளம்பும் என்று எதிர்பார்க்கலாம்