நடிகர்களுக்கு நாயகனாக நடிக்கும் முதல் படத்தின் வெற்றி ஒரு கனவு நிறைவேறிய தருணம். பல நடிகர்கள் முதல் படத்தின் வெற்றிக்குப் பின் ஒரு சில படங்களில் காணாமலே போய்விடுவார்கள். ஒரு நடிகர் 25 ஆவது படம் வரை தாக்குபிடித்தார் என்றால் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் அவர் தனக்கான ஒரு அடையாளத்தையும் சினிமாவில் தனக்கான இடத்தையும் உருவாக்கிவிட்டார் என்று சொல்லலாம். 25 ஆவது படம் என்பது இலக்கல்ல. 25 ஆவது படத்தில் தோல்வி படம் கொடுத்து இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் விஜய் . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் 25 ஆவது படங்களின் வரிசையை இந்த தொகுப்பில் பார்க்கலாம். விரைவில் வெளியாக இருக்கும் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படம் பராசக்தி இந்த பட்டியலில் வெற்றிப்படமாக இடம்பெறுமா என்பதை இன்னும் ஒருவாரம் காத்திருந்து தெரிந்துகொள்ளலாம் .
கமல் 25 - மேல்நாட்டு மருமகள்
ஏ.பி நாகராஜன் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு கமல் நடித்த படம் மேல்நாட்டு மருமகள். IMDB இணையதளத்தின் படி இதுவே அவருடைய 25 ஆவது படமாகும். தமிழில் நல்ல வெற்றிபெற்ற இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது.
ரஜினிகாந்த் 25 - பைரவி
எம் பாஸ்கர் , ஆர் பாஸ்கர் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு ரஜினி நடித்த படம் பைரவி. தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த ரஜினிகாந்த் தனது 25 ஆவது படத்தில் நாயகனாக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியே ரஜினி தொடர்ந்து நாயகனாக நடிக்க காரணமாக அமைந்தது
விஜய் 25 - கண்ணுக்குள் நிலவு
2000 ஆம் ஆண்டு வெளியான கண்ணுக்குள் நிலவு திரைப்படம் விஜயின் 25 ஆவது படம். ஃபாசில் இப்படத்தை இயக்கினார். இப்படத்தில் விஜயின் நடிப்பு பெரியளவில் பாராட்டப்பட்டாலும் படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றிபெறவில்லை
அஜித் 25 - அமர்க்களம்
சரண் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு அஜித்தின் 25 ஆவது படமான அமர்க்களம் வெளியானது. வாலீ முன்னதாக அஜித்தின் வாலீ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றிருந்தது. அதைகாட்டிலும் இருமடங்கு வெற்றிப்படமாக அமர்க்களம் படம் அமைந்தது. தமிழைத் தொடர்ந்து இப்படம் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் ரீமேக் ஆகி வெளியானது
சூர்யா 25 - சிங்கம்
ஹரி இயக்கத்தில் சூர்யாவின் 25 ஆவது படமாக வெளியான சிங்கம். மூன்று முகம் ரஜினி , காக்கி சட்டை கமல் , சாமி விக்ரம் ஆகிய வரிசையில் சிங்கம் சூர்யா என்று சொல்லும் அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் ஹிட் படமாக அமைந்தது சிங்கம் .
தனுஷ் 25 - வேலையில்லா பட்டதாரி
வேல்ராஜ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு தனுஷின் 25 ஆவது படம் வேலையில்லா பட்டதாரி வெளியானது. இளைஞர்கள் , ஃபேமிலி ஆடியன்ஸ் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் கவர்ந்தது.
விஜய் சேதுபதி 25 - சீதக்காதி
பாலாஜி தரனிதரன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியின் 25 திரைப்படம் வெளியானது. கமர்சியல் ரீதியாக தோல்வி என்றாலும் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றது.
சிம்பு 25 - பத்து தல
நீண்ட நாள் படப்பிடிப்பிற்கு பின் சிம்புவின் 25 ஆவது படம் பத்து தல வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.